66
சிந்திக்கத் தூண்டும் செழுந்தமிழ்ச் சொற்றொடரால்
தந்து, நமக்குப் பகுத்தறிவைத் தந்ததுயார்?
நாடக ஆசிரியர் நம்மண்ணா வல்லவோ?
நாடக ஆசிரியர் நம்மண்ணா வாழ்கவே!
'ஓரிரவு' நாடகமே ஊர்போற்றும் நாடகமாம்!
ஓரிரவில் அண்ணா உயர்வாழ் வடைந்திருந்த
தென்னாட்டில் ஏழை திசைகெட்ட பெண்ணுலகை
முன்னிருத்திக் காட்டி முறைப்படுத்தி அஞ்சாப்
பணக்காரன் செய்யும் படுமோசச் செய்கைக்
கணக்கெல்லாம் மக்கள் கருத்திற் கணக்காக்கிப்
புத்தம் புதுக்கருத்துப் புத்துணர்(வு) ஊட்டியே
சத்தாம் மறுமலர்ச்சி நாடகத்தைத் தந்தனரே!
நல்ல புதுத்திருப்பம்! நாவூறும் சொற்றொடர்கள்!
இல்லாரை வல்லாராய் இந்நாட்டில் ஆக்கிவைத்த
சொல்வேராம் எம்மண்ணத் தூய தமிழ் நாடகங்கள்
பல்லோர் புகழும் பகைப்புகழும் ஏற்றதுவே!
அண்ணா படைப்பின் அடியொற்றி நாடகங்கள்
எண்ணத் தொலையர் எழுந்தனவே! தாயகத்தில்
அண்ணாவோர் நாடக ஆசிரியர்! மக்கள் தம்
கண்ணைத் திறப்போர், கருத்தளிப்போர் பின்யாராம்?
ஆசிரியர் அண்ணா! அறிவுத் திருப்பேழை
ஆசிரிவார் அண்ணா அளித்த பல நாடகங்கள்!
நாடகத்தைக் கண்ணால் களிக்கின்ற நல்லறிஞர்
நாடகத்தைத் தீட்டி நமக்களிக்க வல்லாரோ?
நாடகத்துத் தந்தை நம் நாட்டின் முதலமைச்சர்
நாடகத் தாசிரியர்! நற்றமிழ்போல் வாழியவே!