இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
15. கவிதை
வாழ்த்து
(கலித்துறை)
உலகு தோன்றிட உயிரினம் தோன்றிட உயிரை
இலகு வான்வழி எழுகதிர் கால்மழை எழவே
அலையெ ழுந்துமே அழித்திட எண்ணியும் அழியா
மலைபி றந்தசெந் தமிழைநாம் வணங்குவம் மகிழ்ந்தே!
அவையடக்கம்
(அறுசீர் விருத்தம்)
அலைகடற் சங்கின் ஓசை
ஆலைகள் ஆர்க்கும்; நீண்ட
மலையென மாடக் கூடம்
வானினை முட்டும்; மக்கள்
கலைபயில் சாலை யெங்கும்
தமிழிசை காதிற் கேட்கும்;
சிலையெலாம் பூங்கா நிற்கும்.
திருதகர் புதுவை மூதூர்!
செல்வர்கள், வணிகர், கற்றோர்
திருத்தொண்டின் விளைவி னாலே
நல்லதோர் தமிழ்ச்சங் கத்தை
நாட்டினர் புதுவை; ஆட்சி
வல்லுநர் சீலம்1 சங்கம்
வளர்ந்திடத் திறந்து வைத்தார்!
பல்லாண்டு வாழ்க வென்றே