உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாட்டரங்கப் பாடல்கள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

79


சங்கத்துக் கவிய ரங்கின்
     தலைமையை ஏற்கும் மூன்று
சங்கத்துத் தமிழே! சூழ்ந்த
     தமிழர்காள் ! கவிதை பாடி
இங்குளோர்க்(கு) அமிழ்த ளிக்க
     இருக்கின்ற கவிக்கூட் டங்காள்!
உங்களை வாணி தாசன்
     உளமார வணங்கி னேனே!

              கவிஞரும் கவிதையும்

மண்ணில்வாழ் மாந்தர்க் கெல்லாம்
     வழங்கிடும் இயற்கை யன்னை
கண்வழி அழகைத் தேக்கிக்
     களிப்பினில் ஆழ்த்து கின்றாள்!
கண்வழி கண்ட காட்சி
     அழகினில் மறந்து கண்ட
வண்ணமே தானு மாகி
     வாழ்பவர் கவிஞர் ஆமே!

கவிஞரின் உள்ளங் கண்ட
     காட்சியின் உணர்ச்சி வெள்ளம்
புவியினுக் கழகு செய்யும்
     புதுப்புனல் ஆற்றைப் போலக்
கவிஞரின் உணர்ச்சி, செஞ்சொல்,
     கற்பனை, இசை,யாப் பென்னும்
சவியுறு மொழியால் இன்பம்
     தருவது கவிதை ஒன்றே!

மொழியினுக் குருவங் காண
     முற்படாக் காலந் தொட்டே
மொழியினில் உணர்வு தோன்ற
     முகிழ்த்ததே கவிதை! வாழ்க!