பக்கம்:பாட்டரங்கப் பாடல்கள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80


வழிதந்து, வளத்தைத் தந்து
     மனவிருள் ஓட்டு கின்ற
மொழிதந்த மூத்த பிள்ளை
     முன்னோர்கள் கவிதை யாமே!
கற்பவர் மன தீதை யீர்த்துக்
     களிப்பினில் மூழ்கடித்துச்
சொற்பொருள் மனக்கண் முன்னே
     தோன்றிடச் செய்ய வல்ல
பொற்புடைச் செல்வம் செஞ்சொற்
     புலவர் நாப் பிறந்த செல்வம்
கற்பனைக் கவிதைச் செல்வம்
     கலைவளர் செல்வு மாமே!
உலகத்தின் இருளைப் போக்கி
     உயர்ந்தவர் தொழுது போற்ற
அலைகட லுலகம் வந்த
     அருஞ்சுடர்ப் பரிதி ஒக்கும்
விலையிலாக் கவிதை காவம்
     வென்றென்றும் நிலைத்திருக்கும்!
தலைமுறை பலசென் றாலும்
     தனிக்கவி மறைவ துண்டோ?

                 குரவைப் பாடல்

வட்டமாய்ப் பெண்கள் கூடி
     வளைந்துபின் நிமிர்ந்து சாய்ந்து
தட்டுவர் தத்தம் கையைத்!
     தமிழிசை மலைத்தேன் போலச்
சொட்டிடும், உளத்தில் தோய்ந்த
     உணர்ச்சியின் தூய இன்பம்
மட்டின்றித் தோன்றும்! அஃதே
     மாத்தமிழ்க் குரவைப் பாடல்!