உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாட்டரங்கப் பாடல்கள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

87

சேர்ந்திடும் எளிமை மிக்க
       செந்தமிழ்க் கவிதை பாத்துக்
காரென முழக்கஞ் செய்தார்!
       காளைகள் எழுச்சி பெற்றார்!

பிறப்பினில் அன்னோர் பார்ப்பார்!
       பேடியை முறைத்துப் பார்ப்பார்!
முறையிலாச் சாதி பேதம்
       முளைத்திட்ட மூடக் கொள்கை
குறைத்திடப் பார்ப்பார். நல்ல
       கொள்கையின் வழியைப் பார்ப்பார்!
அறத்தினைப் பார்ப்பார் என்றும்
       அதன்வழி நடந்தே பார்ப்பார்!

சிந்துக்குத் தந்தை; நல்ல
       சிறுசிறு கதைப்பா டல்கள்
தந்தவர்; சங்க காலத்
       தமிழெங்கோ புலவர் மாட்டு
முந்தைய பாட்டன் சொத்தாய்
       முடங்கியே கிடக்கக் கண்டு
நொந்தவர்; வாரி மக்கள்
       செவியெலாம் நுழைத்த செம்மல்!

காட்டினிற் குயிலின் பாட்டைக்
       கேட்டவர் கசந்தா போவார்?
வீட்டினிற் கனக சுப்பு
       விருந்தினர் ஆனார்! நல்ல
பாட்டினை அவரைப் போலப்
       பாடவும் தொடங்க லானார்!
மீட்டிடும் யாழின் ஓசை
       வெளியெலாம் நிறைந்த தன்றோ!