உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாட்டரங்கப் பாடல்கள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

17. கலைஞர்
தமிழ் வாழ்த்து

(கலிவிருத்தம்)


வானெழுந்த நீள்கதிரும் மாக்கடலின் வீச்சும்
ஏனெழுந்த தென்றெதுவும் எண்ணமிடா நாளில்
தேனெழுந்த செந்தமிழே! நீயெழுந்தாய் வாழி!
நானெழுந்து வாழ்த்துவதோ? வாழ்த்திடுவோம் நாமே?

அவையடக்கம்
(அறுசீர் விருத்தம்)


அலைகடல் முழக்கும்; புன்னை
      அடர்கிளை பொன்னைச் சிந்தும்;
சிலைவிழி நெய்தல் நீண்ட
      கழியிடைச் சிரிக்கும்; பெண்கள்
கலைபயில் கூட மெங்கும்
      சிலம்பொலி காதிற் கேட்கும்!
புலவர்கள் உலகுக் கீயும்
      புதுமையால் புதுவை யாமே!

தேன் கவித் தமிழ்ச்சி றப்பைப்
      பாரதி தாசன் சேர்த்தார்!
ஆனந்த ரங்கப் பிள்ளை1
      தேசிகப் பிள்ளை2 ஆன்னோர்
வானென இருந்தே என்றும்
      மாத்தமிழ்ப் புகழைக் காத்தார்!
ஆனதால் புதுவைக் கென்றும்

      பெரும்புகழ் ஆட்சி உண்டாம்!