உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாட்டரங்கப் பாடல்கள்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96

பெற்றெடுத்த குழவியுடன் ஒருத்தி வந்தாள்!
        பெண்! பெண்!பெண்! பெண்ணேதான்! மாற்றமில்லை!
சற்றிருந்தேன்; பின் சென்றேன்; ஆணைக் கண்டேன்!
        தலைமாற்ற ஒப்பனையை நேரிற் கண்டேன்!

அன்றொருநாள் கலை நிகழ்ச்சி என்றார் என்றன்
        அயலகத்து நட்டுவனார்! கொட்ட கைக்குச்
சென்றிருந்தேன்; திரைவிலக அரங்கின் மீது
        செழுங்குன்ற மயிலாடக் கண்டேன்; தோகை
நின்றுவிரித் தாடிமயில் அகவக் கேட்டேன்;
        நிலைமறந்தேன்; கானகத்து நினைப்பில் நின்றேன்;
மன்றாடு இளைஞனை நான் காண வில்லை;
        மயில்கண்டேன்! நற்கலைஞர் மாட்சி என்னே!

அழியாது நிலைத்திருக்கும் தமிழ கத்தின்
        அழகுதிருக் குளங்கோயில்! கோயில் மீது
செழியன் நீள் புகழ்போலக் கோபு ரங்கள்;
        சிற்பங்கள்; ஆயிரங்கால் மண்ட பங்கள்!
ஒழிவின்றிப் பல்லாண்டாய்க் கலைஞர் தந்த
        உழைப்பன்றோ நாம்வாழும் வீடும் நாடும்?
மொழியாதோ அவர்புகழை இடிந்த கோட்டை?
        முதற்கலைஞர் இல்லையெனிற் குடிசை யுண்டோ?

சேலாடும் குளத்தினையும், குளத்திற் பூத்த
        செவ்வல்லிச் சிரிப்பினையும், பூத்த பூக்கள்
மேலாடு வண்டினையும், முரற்றும் இன்ப
        மெல்லிசையும் கண் முன்னே நிறுத்திக் காட்டி
நூலாடும் வரிகளிலே சொல்லால் தீட்டி
        நூறு முறை அறைப்பிருந்தே சுவைக்கச் செய்யும்
பாலாடும் சுவைக்கவிதைக் கலைஞர் தம்மைப்

        பண்பாடும் கலைஞரெனப் பகர லாமே!