பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

299


இடத்தில் இப்போது வெறும் மணற்பரப்புத்தான் இருந்தது. கரவந்தபுரத்து வீரர்கள் சிலரும் முத்துக்குளிப்பைத் தொடர்ந்து மேற்பார்வை செய்து நிர்வகிப்பதற்காக நியமிக்கப்பட்டிருந்த அரசாங்கப் பிரதிநிதிகள் மூவரும் சலாபத்துக்கருகே அழிவு நடந்த இடங்களையும் சிப்பிக் கிடங்குகளையும் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் முகங்களில் கவலை தேங்கியிருந்தது. அங்கே யாரிடமாவது இரவு நிகழ்ந்த குழப்பத்தைப் பற்றி விசாரிக்க வேண்டுமென்று கோதைக்கும் அண்டராதித்தனுக்கும் ஆசை துறுதுறுத்தது.

“பார்த்தீர்களா? இதைக் காணும்போது அந்த முரடனும் அவனைச் சேர்ந்தவர்களும் செய்த வேலைதானென்றும் தோன்றுகிறது” என்றாள் கோதை.

“பேசாமல் இரு நமக்கு எதற்கு இந்த வம்பெல்லாம்: நிலைமை சரியில்லை, ஊருக்குப் போய்ச் சேருவோம்” என்று அவள் வாயை அடக்கி அழைத்துக்கொண்டு புறப்பட்டான் அண்டராதித்தன். சுகமாக முன்சிறைக்குப் போய்ச் சேருவதற்குள் இடைவழியில் கலவரங்கள், பூசல்களில் மாட்டிக் கொள்ளாமல் போய்ச் சேரவேண்டுமே என்று நினைத்துப் பயப்படுகிற அளவுக்குக் குழம்பியிருந்தன, புறப்படும்போது அவர்கள் மனங்கள்.

மறப்போர் பாண்டியர் அறத்தினால் காத்து வந்த கொற்கைப் பெருந்துறையில் மறம் நிகழ்ந்துவிட்டது. அலைகள் சங்குகளை ஒதுக்கிக் கரை சேர்த்து விளையாடும் துறையில் அநியாயம் நடந்துவிட்டது. கடல் ஓலமிடுதல் தவிர மனிதர் ஒலமிட்டறியாத கொற்கையில் மனிதர் ஓலமிடும் கலவரமும் நடந்துவிட்டது.


3. நெருங்கிவரும் நெடும் போர்

அடுத்தடுத்து வந்த பயங்கரச் செய்திகளைக் கேள்விப்பட்டுப் பெரும்பெயர்ச்சாத்தன் பதறிப்போனான்.