பக்கம்:பாண்டியன் நெடுஞ்செழியன்.pdf/12

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
6
பாண்டியன் நெடுஞ்செழியன்

றன! மற்றப் பூச்செடிகளில் இலை நன்றாகத் தழைத்து அரும்பு விட்டு மலர்ந்து மணக்கும். ஆனால் மருவோ இரண்டு இலை விடும்போதே மணக்கிறது. இந்தப் பாண்டியனும் அப்படித்தான் இருக்கிறான். அறிவும் அடக்கமும் பெருமையும் சால்பும் இவனுடன் கருவிலே உண்டாகி இருக்கின்றன.”

“அமைச்சர்கள் யாவருக்கும் மகிழ்ச்சிதானே?”

“உருவத்தைக் கண்டு நாம் எதையும் மதிப்பிடக்கூடாது என்பதைப் பலர் தெரிந்துகொண்டார்கள். அரசன் பிராயத்தால் சிறியவனாக இருந்தாலும் அறிவால் பெரியவனாக இருக்கிறான். யார் எது சொன்னாலும் பதற்றம் இல்லாமல் கேட்கிறான். அமைதியாக ஆராய்கிறான். தன்னுடைய கருத்தையும் துணிவாக எடுத்துச் சொல்கிறான். அப்படிச் சொல்வதில் துணிவும் இருக்கிறது; பணிவும் இருக்கிறது. சில சமயங்களில் அவன் எழுப்பும் ஐயங்களுக்கு எங்களாலே விடை கூற முடியவில்லை.”

“அறிவிற் சிறந்த பாண்டிய குலம் வாழட்டும்! புறப் பகைஞர் வராமல் இருக்கட்டும்!” என்று அமைச்சர் மனைவி வாழ்த்தினாள்.

அமைச்சர்கள் தமக்குள் கூடிக் கூடிப் பேசிக் கொண்டார்கள். அவர்கள் முகத்தில் கவலை தேங்கியிருந்தது. ஏதோ ஒரு செய்தியை அரசனுக்கு அறிவிக்க முடியாமல் மயங்குவதாகத் தெரிந்தது. ஒருவர், “நாம் எப்போதும் பாதுகாப்பாக இருக்கவேண்டும். போர் மூண்டுவிட்ட பிறகு ஆயத்தம் செய்வதால் பயன் இல்லை” என்றார்.