பக்கம்:பாண்டியன் நெடுஞ்செழியன்.pdf/47

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
41
போரில் ஊக்கம்

களுக்கு ஊக்கம் குறையவில்லை. போர் வீரர்களுக்கு வெற்றி உண்டாக உண்டாகப் போரில் புகும் ஆர்வம் வளர்ந்து வரும்.

ஆனால் புலவரும் சான்றோரும் இந்த நிலையை விரும்பவில்லை. விடிந்து எழுந்தால் வேல் பிடிப்பதும் வில் பிடிப்பதுமாக அரசன் தன் வாழ்நாளைக் கழித்தால் அவனுடைய வாழ்க்கையில் பிற துறைகள் என்னாவது? அவன் திருமணம் செய்துகொள்ள வேண்டாமா? கலையின்பம் நுகர வேண்டாமா? புலவர்களைப் பாதுகாத்து அவர்கள் கவிதையைக் சுவைக்க வேண்டாமா? தமிழ்ப் புலவர்கள் கூடித் தமிழ்ச் சங்கத்தில் தமிழ் ஆராய்ந்தனர். மாங்குடி மருதனார், நக்கீரனார் முதலிய புலவர் பெரு மக்கள் தமிழை வளம்படுத்தினர். அந்தப் புலவர்களோடு புலவராக வீற்றிருந்து தமிழை ஆராய்ந்து இன்பம் காணும் திறமை பெற்றவர்கள் பாண்டிய மன்னர்கள். நெடுஞ்செழியனிடமும் அந்த ஆற்றல் இருந்தது. அவனே ஒரு புலவன். அப்படி இருந்தும் அதைப் பயன்படுத்திக்கொள்ளும் வாய்ப்பை அவன் உண்டாக்கிக்கொள்ளவில்லை. போர் வேட்கை அவனைக் கடுமையாகப் பற்றிக்கொண்டது.

இந்த நிலையில் புலவரும் சான்றோரும் மதியமைச்சரும் சேர்ந்து, பாண்டியனுடைய போர் வெறியைத் தணிக்க என்ன செய்யலாம் என்று ஆராய்ந்தார்கள். அப்போது அறிவிலும் அநுபவத்திலும் சிறந்த மாங்குடி மருதனார், “நம் மன்னன் வீர மகளின்பால் கொண்ட காதலை மாற்ற வேண்டுமானால் அவனுக்கு ஒரு தேவியைத் திருமணம் முடிப்பதுதான் தக்க வழி; வீரம் மிக்கவர்கள் அமைதி