பக்கம்:பாண்டியன் நெடுஞ்செழியன்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70

பாண்டியன் நெடுஞ்செழியன்

இடையிலே எடுத்துக் காட்டினார் மருதனார். அது மன்னனுடைய கருத்திலே பதிந்தது. வாயார மன்னனை வாழ்த்திப் பாட்டை முடித்திருந்தார் புலவர். அதைக் கேட்டு ஆறுதலாகப் பெருமூச்சு விட்டான் பாண்டியன்.

மதுரைக் காஞ்சி என்ற பெயரே, புலவர் பலவற்றைச் சொன்னாலும் அவர் நோக்கம் நிலையாமையை எடுத்துரைப்பதுதான் என்பதைப் புலப்படுத்தியது. அரசன் அந்தக் குறிப்பை உணர்ந்தான்.

மதுரையைப் பாராதவர்களும் பாட்டைக் கேட்டால் நேரிலே மதுரையைக் காண்பதுபோல இருந்தன வருணனைகள். அவையில் உள்ளவர்கள் யாவரும் பாட்டின் அற்புதமான அமைப்பிலே ஈடுபட்டு மகிழ்ந்தார்கள். அரசனும் பாட்டின் சுவையில் உள்ளத்தைப் பறிகொடுத்தான்; அதன் கருத்திலே கருத்தைப் பதித்தான்.

அரங்கேற்ற முடிவிலே அரசன் மருதனாருக்குப் பலவகையான பரிசுகளை வழங்கினான். “உங்கள் பாட்டினால் தமிழுலகம் பயனை அடையும்; என் வாழ்க்கையும் பயனுடையதாக மாறும் என்று நம்புகிறேன்” என்று அவன் சொல்லி மருதனாரைப் பாராட்டிய போது, அவன் தாம் விரும்பியபடி மனமாற்றத்தை அடைவான் என்று புலவர்கள் எண்ணினார்கள்.

மதுரைக் காஞ்சி தமிழ் மக்களின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டது. அதைப் பாடிய புலவருக்குப் பின்னும் புகழ் ஓங்கியது. மாங்குடி மருதனார் என்று,