பக்கம்:பாண்டிய மன்னர்.djvu/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

v

தெளிந்த மனவுறுதியினா லன்று; சங்க நூல்களிற் காணப்படும் சிற்சில வரலாறுகளின் உதவியாலேயேயாம். பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி, மாங்குடி மருதனார் பாடிய மதுரைக் காஞ்சியில், முற்காலத்து அரசன் எனவும் நல்லோர் சேர்க்கையாற் பேரின்பம் பெற்றான் எனவும் புகழப்பட்டுளான். நிலந்தருதிருவின் நெடியோன் என்ற பெயர் அச்செய்யுளில் அதனையடுத்து வந்துள்ளது. தொல்காப்பியத்துக்குப் பனம்பாரனார் பாடிய பாயிரத்தில் வரும் நிலந்தருதிருவிற் பாண்டியன் என்ற பெயரும் முதுகுடுமியை நெட்டிமையார் பாடிய செய்யுளில் வரும் முந்நீர் விழவின் நொடியோன் என்ற பெயரும் அதனோடு பொருத்தி ஆராயத் தக்கன. சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் பாடும் பஃறுளியாற்றுடன் பன்மலை யடுக்கத்துக் குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ளத் தென்றிசை யாண்ட தென்னவனும் அடியிற்றன்னள வரசர்க் குணர்த்தியவனும் இந்திரன் இட்டமாலை பூண்டோனும் மேகத்தைச் சிறை செய்தவனும் ஆகிய ஒரு பாண்டியன் முந்நீர் விழாவின் நெடியோன் என்று முன்னே கூறப்பட்டவனா, அவனின் வேறா என்று ஆராய்வதும் அவசியமே. திருவிளையாடற் புராணத்தால் அறியப்படும் உக்கிர குமார பாண்டியன் இச்செயல்கள் செய்திருப்பதாய் அப்புராணத்தின் உதவியால் விளங்கு மாகையால், இவ்வளவு பெருமையும் படைத்தவன் உக்கிரப் பெருவழுதியாய் இருக்கலாமோ என்று சிலர் கூறுகின்றனர்.

அகநானூறு தொகுப்பித்தோன் உக்கிரப் பெருவழுதி யென்பது அந்நூல் வரலாற்றால் விளங்குகிறது. இவ்வுக்கிரப் பெருவழுதிக்கு நண்பனாயிருந்த சோழன் இராய சூயம் வேட்ட பெருநற்கிள்ளி என்பான், பின்னா-