பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

79

வலி கிடையாது : குடல் வியாதி, நுரையீரல் குறைகள், எலும்புக்குள்ளே உள்ள பிரச்சினைகளைத் தவிர, அனைத்து நோய்களையும், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மூலம் தெரிந்து கொள்ள முடியும். இக் கருவியைப் பயன்படுத்தும் போது நோயாளிக்குச் சிறிதளவும் இம்சையோ, வலியோ ஏற்படுவதில்லை. நோயாளியின் படுக்கைக்கே எடுத்துச் செல்லும் வசதி, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனில் மட்டுமே உள்ளது. முன்பெல்லாம் தீராத வயிற்றுவலி என்று வந்தால் வயிற்றில் அறுவை சிகிச்சை செய்து, அதன் பின்னர் தான் பிரச்சினை என்ன என்று கண்டுபிடிக்க முடியும். ஸ்கேன் வந்த பின்னர், நோயை அறிந்து கொள்ள அறுவை சிகிச்சை தேவை இல்லை. ரத்த ஓட்டம், ரத்தக்குழாயில் உறைவு, கர்ப்பத்தில் உள்ள குழந்தைகளின் குறைகளைக் கண்டுபிடிக்க முடியும்.

வகைகள்: அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனைப் பொருத்தவரை 2டி அல்ட்ரா சவுண்ட். கலர் டாப்ளர்(Colour Doppler), 3டி எக்கோ என்பவை முக்கிய மூன்று வகைகள். இதில் 2டி ஸ்கேன், கறுப்பு - வெள்ளைப் படம் பார்ப்பது போல் தெரியும். கலர் டாப்ளர் ஸ்கேனில், உடலில் ஓடும் ரத்தக்குழாய் துல்லியமாகத் தெரியும். 3டி எக்கோ ஸ்கேனில், முப்பரிமாணமும் தெரியும். அதாவது உடலின் உறுப்பை முழுப் பரிமாணத்தில் பார்க்க முடியும். இது தவிர என்டாஸ்கோப் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் உள்ளது. இதை உடலின் உள்ளே செலுத்தி, வயிற்றுக் கட்டி மற்றும் புற்றுநோயைக் கண்டுபிடிக்கலாம். அறுவை சிகிச்சை நடந்து கொண்டிருக்குபோது, வயிற்றில் இருக்கும் கட்டி எவ்வளவு தூரம் விரிந்திருக்கிறது. அதன் பருமன் என்ன என்பதைக் கண்டறிந்து மருத்துவருக்குத் தெரிவிக்க, இன்ட்ரா ஆப்ரேட்டிவ் அல்ட்ரா சவுண்ட் கருவி உள்ளது. குழந்தையின் தலைப் பகுதியை, ஸ்கேன் செய்ய (cranial) ஸ்கேன், பார்வைக் கோளாறுகளைக் கண்டறியும் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்களும் உள்ளன. கைகால்கள் மூட்டுகள் விலகி இருந்தால் ஸ்கேன் மூலம் கண்டு பிடித்து செய்ய முடியும். விபத்தில் சிக்கியவர்களுக்கு உள்காயம் ஏதும் உள்ளதா எனக் கண்டுபிடிக்கலாம்.