பக்கம்:பாரதத்தில் செழித்த வைணவம்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாரதத்தில் செழித்த வைணவம்

                         141

அருளினாலே வழங்குகின்ற விடுதலை புஷ்டியாகும். மாரியாதா என்னும் மார்க்கத்திலே ஆன்மாக்களது தகுதி நோக்கி விடுதலை வழங்க இறைவன் விரும்புகின்றான். புஷ்டி நெறியிலே, ஆன்மாக்கள் வேதங்களின் வழிகளை ஒரு சிறிதும் பெறாதபோதும் இறைவன் அவற்றை விடுவிக்க விரும்புகின்றார். இறை அருள் புரியத் தேர்ந்தெடுப்பது பற்றிய கொள்கை மேல்நாட்டிலே தோன்றிய அகஸ்த்தீன் என்பவர் கருதியது போல, வல்லபக் கருத்து முறையிலே குறிக்கத் தக்க ஒரு கூறாக விளங்குகிறது. இது புஷ்டியாக்கம் எனப் பெயர் பெறுகிறது. புஷ்டி மார்க் கத்தைப் பின்பற்றுகின்ற பக்தர்கள் கிருஷ்ணனிடத்து இயல்பிலேயே பெருகி அன்பு பூண்டவர்கள். இறைவனிடத்துக் கொள்ளும் எல்லையில்லாத அன்பின் விளைவாக அனைத்துச் செயல்களிலும் அமைவதும், வங்கத்தின் வைஷ்ணவக் கொள்கைகளுள் காணப் பெறுவதுமாகிய ராகானுகபக்தி என்பது, புஷ்டி பக்தியை ஒத்ததாகும். - புஷ்டி பக்தர்கள் மிகுந்த பணிவன்போடு இறைவனையே சார்ந்து தெய்வீக இன்பத்தினை நுகர்வார்கள். இந்நுகர்வு இறைவனால் தேர்ந்து எடுக்கப்படுகின்ற நிலையிலேயே அமைவதாகும். மாரியாதா நெறியில் இறைவனிடத்துக் கொள்ளும் அன்பானது ஒன்பது வகைப் பக்தி முறைகளின் விளைவாகும். இங்கு புஷ்டி மார்க்கத்தில் அன்பே முதல் நிலையாகும். இவ்வன்பின் விளைவாக ஒன்பது வகை பக்திகள் தோன்றுவதோடு பிற ஆன்மீகச் செயல்நிலைகளும் தோன்றுகின்றன. ஆகவே, மாரியாதத்தின் எதிர்நிலைக் கொள்கையாக புஷ்டிக் கொள்கை அமைகிறது. புஷ்டி வகை பக்தர்களை நான்கு பகுப்புக்களாக அவர்களது தனித்த பண்புகட்கு ஏற்ப வல்லபர்