பக்கம்:பாரதத்தில் செழித்த வைணவம்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாரதத்தில் செழித்த வைணவம்

                         145

கருத்து ஒருமையால், நட்பால், இறைவனோடு நிலைத்த உறவினை அமைப்பதில் வெற்றி காண்கின்றானோ அவன் தெய்வீக இன்பத்தைத் துய்ப்பதில் ஐயமில்லை.இறைவனிடத்தில் ஆன்மா கொள்ளும் உறவு வகைகள் சில உள. இவற்றுள், மேற்குறித்த கோபிகளது அன்பு நெறி ஒன்றாகும். காதலன் ஒருவன், தனது காதலிடத்துக் கொள்ளும் முருகிய அன்பினாலே, நெருங்கிய உறவை அமைத்துக் கொள்கிறான்.ஆன்மாவும், இறைவனிடத்து இத்தகைய பேரன்பின் உருவேயாகும். மகளிரே இறைவனது இன்பினை நுகர்வதற்குத் தகுதியுடையோர் என்று வல்லபர் கூறுகின்றார். வழிபாட்டில் பெண்மைக் கூறு இன்றியமையாதது பெண்மைக்கூறு இன்றி வழிபாடு இனிது அமையாது.சில பக்தர்கள் கிருஷ்ணனைத் தம் குழந்தையாக வழிபடுகின்றனர். அனைத்து ஆன்மாக்களும் உண்மையில் பெண்டிரேயாகும். இவர்களது இயல்பான கேள்வன் கிருஷ்ணன் ஆவான். ஒவ்வொரு ஆன்மாவும் கிருஷ்ணனைக் காதலிக்க வேண்டும். மனைவி கணவனிடத்துக் கொள்ளும் அன்புபோல ஒவ்வொரு ஆன்மாவும் கிருஷ்ணனிடத்து அன்பு செலுத்த வேண்டும். நாயக நாயகி நிலையிலே அமையும் வழிபாடு இஸ்லாமிய அனுபூதி நெறியாகிய சூஃபி நெறிக்கு மாறானது. புஷ்டி மார்க்கத்தின் கதவுகள், அடையாத நெடுவாயில்கள் ஆகும். யாவரும் புஷ்டி மார்க்கத்தை மேற்கொள்ளலாம். கோபிகளது வழிபாட்டிலே விளக்கம் பெறுகின்ற புஷ்டி பக்தி, உயர்ந்த இலட்சியம் கொண்டது எனினும் இன்றைய சூழ்நிலையில் பின்பற்றுதற்கு அருமையுடையதாகிறது. ஆதலால், வல்லபர் எளிய வழி ஒன்றினை வகுக்கிறார். இவ்வழி பெரிதும் இனிமை பயப்பதாகும். இறைவனிடத்து அனைத்தையும், ஒப்புவிக்கின்ற பிரபத்தி நெறியே இந்த எளிய நெறியாகும்.