பக்கம்:பாரதத்தில் செழித்த வைணவம்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

172 த. கோவேந்தன்

   இராகாத்மிக பக்தியின் முடிவு நிலை மகாபாவம் (Mahabhavam) ஆகும். இது ஜீவனிடத்து முன்பு கூறிய இராதை, கிருஷ்ணன் ஆகிய இருவரிடையே தோன்றும் தெய்வீக அன்பின் பெருக்கைக் குறிப்பதாகும். ராதையி் அன்பு கிருஷ்ணன் இடத்து நிறைவுறுகிறது. கிருஷ்ணன் அன்பு ராதையினிடத்து நிறைவுறுகிறது. ஒருவரது அன்பு மற்றொருவர் இன்றி நிறைவுறாது.
    பக்தி என்பது ஜீவனின் ஆன்மீக வாழ்வாகும். ஜீவன் அடையத் தக்க உயரிய வாழ்வினை விளக்குவதாகும். ஜீவன் தனது உண்மை நிலையினை மறந்து அதற்கு ஏற்ப வாழ்ந்து பரம்பொருளை உணர்தல் பக்தியாகும். ஜீவன் தன்னை 'மொனாடாக' கருதுகிறது. இறைவனுக்கு என்றென்றும் அடிமைபூண்டு ஒழுகும் வாழ்வினை மேற் கொள்கிறது. இறைவனே உண்மையில் உள்ளவன் ஆவான். நிறையுடைவன் ஆவான். பக்தி என்பது ஜீவனுக்கு இயல்பிலே பொருந்துவதாகும். செயற்கையிலே புதியதாக அமைவதன்று.
    ஆன்மீகப் புனர்வாழ்வு குறித்துப் பக்தி என்பது சேர்க்கப்பெறுவது அன்று. அனைத்து ஜீவர்களும் இயல்பிலே பக்தர்கள் ஆவர். இறைவனிடத்து அன்பு பூண்டு ஒழுகும் ஏவலாளர் ஆவர். இறைவனின் சொரூபத்தின் கூறுகளாக ஜீவர்கள் அமைகின்றனர். ஜீவர்களிடத்து உள்ளார்ந்த நிலையில் இயல்பாகத் தோன்றும் பக்தி அல்லது ஈடுபாடு நித்திய முக்தர்கள் இடையே கட்டுறாத நிலையில் விளங்கும். ஆன்மாக்கள் இடையே எப்பொழுதும் விளங்குகின்றது. 
    வைகுந்தத்திலும் பிருந்தாவனத்திலும் இறைவனுக்கு இடைவிடாது குற்றேவல் செய்து அங்கேயே தங்கி வாழ்பவர் நித்திய முக்தர்கள் ஆவர். நித்திய முக்தர்கள் மாயாசக்தியைக் கடந்து தெய்வ உலகுகளிலே வாழ்வோர்