பக்கம்:பாரதத்தில் செழித்த வைணவம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



உள்ளத்தியல் (Plychology)

ன்மாவின் உள்ளத்து இயல் எதிர்மறைச் சொற்களில் விவரிக்கப்பெறுகிறது. குறித்த சில பிழையான வரையறைகளையும், கருத்துகளையும் சோதித்த பின்னர் விசிஷ்டாத்வைதம் தனது கருத்தினை வெளியிடுகிறது.

பொருள் முதற்கொள்கை உடையோராகிய சாருவாகர், ஆன்மா, அணுக்களின் தொகுதி எனவும், பெளதிக மாற்றங்களால் ஆனாது எனவும் குறிக்கிறார். சாருவாகரது கருத்து, பிழையுடையதாகும். பொருள், சிந்திக்கும் இயல்பு அற்றது. முக்தியை அடைதற்குரிய முயற்சியோ, திறனோ அற்றது. உயிர்ப்பொருள் ஒன்று உண்டு; அதுவே ஆன்மா என்னும் உயிராற்றல் கொள்கையோரும், தவறாகவே வாதிடுகின்றனர். உயிராற்றல் அல்லது பிராணன் அகத்து நிகழ்கின்ற ஒரு தொழிலாகும். இவ்வாற்றல் தன்னையும் நிலைநிறுத்திக்கொண்டு, பெரு கியும் வருகிறது என்பது வாதத்தில் நிலைக்காத ஒன்றாகும்.

பெளத்தர்கள் புலனுகர்ச்சி அல்லது அனுபவ வழியில் ஒரு கொள்கையைக் கருதுகின்றனர். ஆன்மா, ஐவகைப் புலனுகர்ச்சிகளின் கொத்து அல்லது ஸ்கந்தங்களின் தொகுதி என்று கருதுகின்றனர். ஐவகை ஸ்கந்தங்களும் ஒருங்கே உடல் உள்ளம் ஒன்றிய ஒரு அமைப்பாகக் காணப்பெறுகின்றன.