உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24. சுஜாதா


“பாஸஞ்சர், திருநிலத்தில் போனால் போகிறது என்று நின்றது. ஒரு பெண் ஓடி வெள்ளரிப் பிஞ்சு விற்றாள். முதல் வகுப்புப் பெட்டியிலிருந்து ஒரே ஓர் இளைஞன் நீல நிற சூட்கேஸ், ஒரு கித்தாருடன் இறங்கினான். அவன் கழுத்தில் காமிரா மாலை, அந்தப் பிரதேசத்தில் மிகவும் விநோதனாக, அந்நியனாக நின்றான். வெயில் கண்ணாடி அணிந்து சுற்றிலும் பார்த்தான்.

சின்ன ஸ்டேஷன். கச்சிதமான ஓர் அறை. அதனுள் சுவரில் பதித்த, வாய் திறந்த, புராதன டெலிபோனில் ஸ்டேஷன் மாஸ்டர் பேசிக்கொண்டிருந்தார். பிளாட்பாரத்திலேயே கைகாட்டி இறக்கும் லீவர்கள் இருந்தன. தண்டவாளத்துண்டு, மணியாக சரக்கொன்றை மரத்தில் தொங்கியது. அதை இரு தடவை, மஞ்சள் மலர்கள் உதிரத் தட்டிவிட்டு அந்த நீலச் சட்டைக்காரன், அன்னியனை ஒரு வஸ்துவைப்போல் பார்த்துக் கொண்டே சாவியுடன் என்ஜின் திசையில் நடந்தான். கருங்கல் கட்டடம். சற்றே தூரத்தில் மூன்றே மூன்று வீடுகள். ஸ்டேஷனிலிருந்து ஒரு மண் பாதை புறப்பட்டு எங்கேயோ மாயமாய்ச் சென்றது. ஓர் ஆலமரம் ஏறக்குறைய ‘ஸ்டேஷனே என்னுடையது’ என்று அணைத்துக் கொண்டிருந்தது.

பா—13