உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாரதிதாசன், முருகு சுந்தரம்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பழுத்த எலுமிச்சம் பழத்தின் நிறம், ஒற்றை நாடி உடம்பு உட்காருவது கூடப்பாரதி போலச் சப்பணம் போட்டு மார்பையும் தலையையும் நிமிர்த்து உட்கார்ந்திருந்தார். பேசுவதும் பாரதி போலவே வெடுக்கென்று பேசினார்.

அனைத்துலகத் தமிழக்கவிஞர் பெருமன்றத் துவக்கவிழாவில் பாரதிதாசன் பேசிய பேச்சில் பொதிந்திருந்த கருத்துக்கள் பின் வருமாறு:

"உலகின் பல நாடுகளிலும் வாழும் தமிழ்க் கவிஞர்கள் எல்லோரையும், ஒன்றாகத் திரட்டி ஒரு பெரிய சக்தியாக உருவாக்குவது இம்மன்றத்தின் முதல் நோக்கம். அவர்கள் பாடல்களையெல்லாம் ஒன்றாகத் திரட்டி நூலாக வெளியிட வேண்டும். அப்பாடல்களை ஆங்கிலத்திலும், பிற மொழிகளிலும் மொழி பெயர்க்க வேண்டும். தில்லிக்கும், பிற மாநிலங்களுக்கும் தமிழே அறியாத சிலர், தாங்கள்தாம் தமிழ்க் கவிஞர்களின் முகவர்கள் என்று கூறிக்கொண்டு செல்கிறார்கள். அத்தகைய வேற்றுமாநில மன்றங்களுக்குக் கவிஞர் மன்றம் தனது முகவரை அனுப்ப வேண்டும்".

அனைத்துலகத் தமிழ்க் கவிஞர் பெருமன்றத்தை இயக்க பாரதிதாசன் தலைமையில் ஒரு செயற்குழு அமைக்கப்பட்டது. மன்றத்தின் சார்பில் திங்கள் இருமுறை இதழாகக் 'குயில்' ஏடு துவக்கப்பட்டது. பாரதிதாசன் இறப்பிற்குப் பிறகு தமிழ்க்கவிஞர் பெருமன்றம் கவிஞர் சுரதாவாலும், கவிஞர் பொன்னடியானாலும் தொடர்ந்து பேணப்பட்டு உயிர்வாழ்ந்து கொண்டிருக்கிறது.

இறுதிப் பயணம்

பாரதியின் வாழ்க்கையை உடனிருந்து கண்டவர் பாரதிதாசன். பாரதியாரின் வரலாற்றை எப்படியாவது எழுதி முடிக்க வேண்டும் என்பது அவர் நீண்டநாள் அவா. தம் வாழ்வின் இறுதிக் கட்டத்தில் அதை எழுதி முடிக்க முழு மூச்சோடு பாரதிதாசன் ஈடுபட்டார். இரவு பகலாக உழைத்துப் பாரதியின் வாழ்க்கையை நாடக வடிவில் எழுதிமுடித்தார்.

இடையறாத எழுத்துப் பணியும், திரைப்பட முயற்சியால், ஏற்பட்ட மனஉளைச்சலும் அவரைக் கடுமையாகப் பாதித்தன.