பக்கம்:பாரதிதாசன், முருகு சுந்தரம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2

பாரதியும் தாசனும்

பைந்தமிழ்த் தேர்ப்பாகன், அவனொரு
செந்தமிழ்த் தேனீ, சிந்துக்குத் தந்தை!

1962ஆம் ஆண்டு, நான் சென்னையில் கல்லூரி மாணவனாக இருந்தேன். அப்போது பாரதிதாசனை அடிக்கடி சந்திக்கும்பேறும், அவரிடம் கவிதை பயிலும் வாய்ப்பும் எனக்கு ஏற்பட்டன. ஒரு நாள் அவரிடம், பாரதியார் பற்றிக் கூறுங்கள் என்று நான் கேட்டபோது பாரதியார் சந்திப்பைப் பற்றிக் கீழ்க்கண்ட கருத்தைச் சொன்னார்.

பாரதியார் கி.பி. 1908இல் புதுச்சேரி வந்தார். அவர் புதுச்சேரி வந்து ஓரிரண்டு ஆண்டுகள் கழித்துத்தான் அவருக்கும் எனக்கும் பழக்கம் ஏற்பட்டது. பாரதியாரோடு பழக்கம் ஏற்பட்ட நேரத்தில் நான் இருபது வயதுக்காளை. நான் அரசியற் கழகம், புலவர் கழகம் சண்டைக்கழகம் (மற்களம்) ஆகிய எல்லாவிடத்திலும் இருப்பேன். என் தோற்றமே பார்ப்பதற்கு முரட்டுத்தனமாகத்தான் தெரியும்.

கையில் தங்கக் காப்பும், கழுத்தில் கறுப்புக் கயிறும், மேனி தெரியும் மல் ஜிப்பாவுமாக எப்போதும் 'வஸ்தாது' போல் திரிந்து கொண்டிருப்பேன். என் நடையுடை பாவனைகளில் ஒரு பண்பட்ட நிலை அப்போது ஏற்படவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். மற்களத்தில் முறையாகப் பயிற்சி செய்யத் தொடங்கியிருந்ததால், உடற்கட்டும் நன்றாக இருந்தது.

பாரதியாரின் தோற்றமும், வெளிப்படையான போக்கும் என்னை அவர்பால் இழுக்கத் தொடங்கின. அவர் தொடர்பு என் பழக்க வழக்கங்களிலும், சிந்தனையிலும் என்னையறியாமலே சில மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. அதைக் காலப்போக்கில் நானும் உணரத் தொடங்கினேன். சுப்புரத்தினமாக இருந்த நான் 'பாரதி தாசனாக மாறத் தொடங்கினேன்.'