20
பாரதிதாசன்
1963ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் பொள்ளாச்சி நகரில் பெரிய அளவில் பாரதி விழா நடந்து கொண்டிருந்தது. கவிஞர் கே.சி.எஸ். அருணாசலம், கவிஞர் சிற்பி, பாரதி அன்பர்கள் பலர் சேர்ந்து சிறப்பாகக் கொண்டாடிய விழா அது. அவ்விழாவில் திரு. எஸ். இராம கிருஷ்ணன், சிலம்பொலி செல்லப்பன், ருசியத் தமிழ் மாணவி இசபெல்லா ஆகியோர் சொற்பொழிவாற்றினர். பாரதிதாசனும் அவ்விழாவில் கலந்து கொள்ள அழைக்கப் பட்டிருந்தார்.
அவ்விழாவில் பேசிய பேச்சாளர் ஒருவர் பாரதியை 'அவன்' என்று ஒருமையில் குறிப்பிட்டுப் பேசினார். மேடையில் அமர்ந்திருந்த பாரதிதாசனுக்குச் சுள்ளென்று சினம் பொங்கி விட்டது. 'பாரதியார்' என்று மரியாதையாகக் குறிப்பிடுமாறு மேடையிலிருந்து முழங்கினார் பாரதிதாசன்.
பார்த்தவர்களை மலைக்க வைக்கும்படியான தோற்றம் பாரதிதாசன் தோற்றம். அவர் குனிந்திருந்ததை யாரும் பார்த்திருக்க முடியாது. நின்றாலும், உட்கார்ந்திருந்தாலும் அவருடைய நெஞ்சும் தலையும் நிமிர்ந்தே இருக்கும். ஆனால் பாரதியாரைப் பற்றிப் பேசும்போது மட்டும் அவர் தோற்றத்தில் ஓர் ஒடுக்கமும், பேச்சில் ஓர் அடக்கமும் தோன்றியதை நான் கவனித்திருக்கிறேன். பாரதியைப் பெயர் சொல்லிக் குறிப்பிடுவதை விட அய்யர் என்று கூறுவதில் பாரதிதாசனுக்கு அலாதி விருப்பம்.
பாரதியாருக்கும் பாரதிதாசனுக்கும் ஏற்பட்ட முதல் சந்திப்பு ஒரு சுவையான நிகழ்ச்சி. பாரதிதாசன் இளமையில் வாழ்ந்த வீடு காமாட்சியம்மன் கோயில் தெருவில் இருந்தது. அந்தக் காமாட்சியம்மன் கோயில் தெருவும், மாதா கோயில் தெருவும் சந்திக்கும் முனையிலே வேணுநாயக்கரின் சிலம்பப் பயிற்சிக் கூடம் இருந்தது. பாரதியார் வரலாற்றில் குறிப்பிடப்படும் அம்மாகண்ணு அம்மாவின் மூத்தமகன் தான் வேணுநாயக்கர். சிலம்பக் கூடத்துக்குக் 'கரடிக் கூடம்' என்ற பெயரும் உண்டு. இக்கூடத்திலேயே பாரதிதாசன் பயிற்சி பெற்றார்.
அடுத்த தெருவில் குடியிருந்த பாரதியார் சில நாட்களில் பாரதிதாசன் குடியிருந்த காமாட்சியம்மன் கோயில் தெரு வழியாகச் செல்வதுண்டு. அவருடைய ஆடையும்,தோற்றமும், நடையும் மற்றவரிடமிருந்து அவரை வேறுபடுத்திக் காட்டுவனவாக இருந்தன.