பாரதியும் தாசனும்
25
பாரதிதாசன் நேரே புதுச்சேரி புகை வண்டி நிலையம் சென்று அங்குப் பாரதியார் இருப்பதைக் கண்டார். பாரதியார், கண்களில் தீப்பொறி பறக்க, நிலையத்தில் யாருடனும் பேசாமல் உலவிக் கொண்டிருந்தார். சுப்புரத்தினத்தைப் பார்த்ததும் பாரதியாரின் முகம் ஓரளவு மலர்ச்சி அடைந்தது.
பாரதியாரை எப்படியோ சமானதாம் செய்து தள்ளுவண்டியில் ஏற்றி உட்கார வைத்துக் கொண்டு திரும்பினார். இத்தள்ளுவண்டி அந்நாளில் புதுவையில் பிரபலம், மனிதன் தள்ளும் மூன்று சக்கர வண்டி தருமராசா கோயில் வீதியிலிருந்த தன் வீட்டுக்கு வர மறுத்தார் பாரதி. எனவே சுப்புரத்தினம் வீட்டை நோக்கி வண்டி சென்றது.
அப்போது பாரதியாரின் வீட்டு வேலைக்காரி அம்மாக் கண்ணு வண்டியை வழிமறித்து, கையில் கொண்டு வந்த சுண்டல் முதலிய தின்பண்டங்களைப் பாரதியின் கையில் கொடுத்தாள். அம்மாக் கண்ணுவின் உபசாரம் அன்று பூராவும் பட்டினி கிடந்த பாரதிக்குப் பெரு மகிழ்ச்சியாக இருந்தது. சுண்டலை வாயில் போட்ட பாரதிதாசன் தேவாமிருதம்' என்றார். உடனே பாரதியாருக்குத் தேவலோக நினைப்பு வந்துவிட்டது. வண்டிக்காரனைப் பார்த்து 'ஓட்டடா ரதத்தை' என்றாராம் பாரதி.
கவிதை எழுதத் தவங்கிடக்க மாட்டார் பாரதியார். கவிதை உள்ளத்திலிருந்து அருவியாகக் கொட்ட வேண்டும். கவிதை எழுதி முடிக்க வேண்டுமே என்பதற்காகப் பொருத்தமில்லாத சொற்களைப் பொறுக்கிக் கொண்டு உட்கார்ந்திருக்க மாட்டார். சொத்தைச் சொற்களை நத்தும் வழக்கம் அவரிடமில்லை. கவிதை நின்று விட்டால் எடுத்து வைத்து விடுவார். பின்னர் அது எப்போது பீறிட்டுச் சுரக்கிறதோ அப்போது மீண்டும் தொடருவார். இது அடுத்த நாளாக இருக்கலாம். அடுத்த திங்களாகக் கூட இருக்கலாம். ஆங்கிலக் கவிஞனான வோர்ட்ஸ் வொர்த் 'Wandering Voice' என்ற சொற்றொடருக்குப் பன்னிரெண்டு ஆண்டுகள் காத்திருந்தாக வரலாறுண்டு.
பாரதியார் எழுதிய புதிய ஆத்திசூடி 'பௌவனம் காத்தல் செய்' என்பதோடு நின்று விட்டது. அதை எடுத்து வைத்துவிட்டு எதிரில் இருந்த பாரதிதாசனிடம் “சுப்பு! மனிதர்கள் வீடு பிடிக்கவில்லை. இயற்கை வீட்டில் உலாவச் செல்லலாம்" என்றார்.