பக்கம்:பாரதிதாசன், முருகு சுந்தரம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

பாரதிதாசன்


"வாழைக்குளம் தாண்டித் தென்னந்தோப்பும் நீர் ஊற்றும் உண்டு; நிலமும் தூய்மையாக இருக்கும்” என்றார் பாரதிதாசன். இருவரும் புறப்பட்டனர். தெருமுனையை அடைந்தபோது பினாகபாணியின் குழந்தையின் சாவுப்பயணம் எதிரில் வந்தது. பினாக பாணி நண்பர். எதிரில் கண்டு கும்பிடும் போட்டுவிட்டார். எனவே பாப்பம்மாள் சுடுகாட்டுப் பயணம் கட்டாயமாகிவிட்டது.

பாரதியாருக்கு ஓர் இளநீர் வாங்கிக் கொடுத்துவிட்டுப் பாரதிதாசன் துண்டைவிரித்துப் போட்டு ஒரு சிதைந்த மல்லிகைச் செடியின் அருகில் படுத்தார்.

மல்லிகையின் சிற்றரும்பும் பூவும் சிரித்துக் கொண்டிருந்த அழகில் பாரதிதாசன் ஈடுபட்டிருந்தபோது அம்மலர்களை எவனோ ஒருவன் பாப்பம்மாள் கோயில் சிலையின்மீது போடப் பறித்துக் கொண்டு சென்றுவிட்டான். இதைக் கவனித்த பாரதியார், "சுப்புரத்தினம் உனக்கு இளநீர்க் காயில்லை; அதுவுமல்லாமல் நீ பார்த்துச் சுவைத்த மல்லிகைச் செடியின் அரும்புகளையும் பூக்களையும் பறித்துக் கொண்டு போய்விட்டான் அதோ அந்தக் கல்லின்மேல் போட" என்றார். உயிர் ததும்பும் அழகைவிடப் பாப்பம்மா கோயில் சாமி சிறந்ததில்லை என்பது பாரதியார் எண்ணம்.

'யெளவனம் காத்தல் செய்' என்ற அளவில் நின்ற ஆத்தி சூடி தொடர்ந்தது. 'ரசத்திலே தேர்ச்சி கொள்' 'ராஜசம் பயில்' 'ரீதி தவறேல்' 'ருசிபல வென்றுனர்' 'வெளவுதல் நீக்கு' என்று புதிய ஆத்தி சூடியை முடித்தார்.

பாரதிதாசன் ஆனந்த விகடனில் எழுதிய 'பட்டினித் திருநாள்' என்ற கட்டுரை மிகவும் சுவையானது. பாரதியும் செல்லம்மாவும் வறுமையை எவ்வளவு மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார்கள் என்பதை நகைச்சுவை குன்றாமல் கூறுகிறது அக்கட்டுரை.

பாரதிதாசன், சுப்புரத்தினமாக இருந்த இளமைக் காலத்தில் பக்திப் பாடல்களும், சிறுசிறு தனிப்பாடல்களும், வண்ணம். இலாவணி போன்ற பாடல்களும் எழுதியுள்ளார். என்றாலும் கவிதைத் துறையில் எளிமையும் பக்குவமும் ஏற்பட்டது பாரதியின் தொடர்பிற்குப் பிறகுதான். பாரதி, சுப்புரத்தினத்தை ஒரு இலட்சியக் கவிஞராக உருவாக்கிவிட்டார்.