பக்கம்:பாரதிதாசன், முருகு சுந்தரம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

பாரதிதாசன்

பங்காருபத்தர். இதைப் பற்றிப் பாரதியிடம் கூறினால் "ஏன் சுப்பு! அங்குப் போனான் என்று ஒற்று போட்டு எழுதினால் கேட்பதற்கு நன்றாகவா இருக்கிறது?" என்று கூறி மழுப்பிடுவாராம்.

"கேட்பதற்கு நன்றாக இருக்கிறதோ இல்லையோ, இலக்கணப் பிழையோடு எழுதுவது தவறுதானே?" என்று பாரதிதாசன் கூறுவாராம். பாரதி அதற்குச் சிரித்துக் கொள்வதோடு சரி. வேறொன்றும் கூறமாட்டாராம்.

1918ஆம் ஆண்டு பாரதியார் புதுச்சேரியிலிருந்து புறப்பட்டு விட்டார். கடலூர் எல்லையில் கால் வைத்ததுமே தமிழகக் காவல் துறையினர் பாரதியைக் கைது செய்து சிறையில் அடைத்துவிட்டனர். அதன்பின் கடையத்திலும் சென்னையிலும் மூன்று ஆண்டுகள் வாழ்ந்து உயிர் நீத்தார் பாரதியார்.

1946ஆம் ஆண்டு பாரதி விழாக் கவியரங்கம் திருச்சி வானொலி நிலையத்தாரால் நடத்தப்பட்டது. அக்கவியரங்கிற்குப் பாரதிதாசன் தலைமை ஏற்றார். பசுமலை சோம சுந்தர பாரதியும் அக்கவியரங்கில் பங்கு பெற்றார். அப்போது பாரதிதாசன் பாடிய தலைமைக் கவிதை ஒப்புயர்வற்றது. அதில் பாரதியைப் பாராட்டிப் பாரதிதாசன் பாடியதுபோல், இதுவரை வேறு யாரும் பாடியதில்லை.

பைந்தமிழ்த் தேர்ப்பாகன், அவனொரு
செந்தமிழ்த் தேனீ, சிந்துக்குத் தந்தை!
குவிக்கும் கவிதைக் குயில் இந்நாட்டினைக்
கவிழ்க்கும் பகையைக் கவிழ்க்கும் கவிமுரசு.
நீடு துயில்நீக்கப் பாடிவந்த நிலா
காடு கமழும் கற்பூரச் சொற்கோ

கற்பனை ஊற்றாம் கதையின் புதையல்
திறம்பாட வந்த மறவன், புதிய
அறம்பாட வந்த அறிஞன், நாட்டிற்
படரும் சாதிப் படைக்கு மருந்து
மண்டும் மதங்கள் அண்டா நெருப்பவன்
அயலார் எதிர்ப்புக் கணையா விளக்கவன்
என்னென்று சொல்வேன் என்னென்று சொல்வேன்
தமிழால் பாரதி தகுதி பெற்றதும்
தமிழ்பாரதியால் தகுதி பெற்றதும்.