பக்கம்:பாரதிதாசன், முருகு சுந்தரம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தேசியக் கவி

31

அங்கத் தனைபுய வலிபெற விசயனை
முந்தச் செயுமருள் எனதுள மிசையுற வரவேணும்...

விடுதலைப் போருக்குச் சிங்கம் போன்ற மனவலிமையும் அருச்சுனன் போன்ற போர் ஆற்றலும் தனக்குத் தரவேண்டுமென இப்பாடலில் பராசக்தியை வேண்டுகிறார்.

ஆத்திகராக அன்று விளங்கிய, இளைய பாரதிதாசனுக்குக் காந்தியடிகளின் பிறப்பு ஓர் அவதாரமாகப்பட்டது. இறைவன் அனுப்பிய பரிசுத்த ஆவி இயேசுவாக அவதரித்தது போல், இறைவனின் அருட்பேரொளியே காந்தியாக அவதரித்தது என்பதைக்

குறுகிய செயலில் வையம்
குதித்தது கரைக்கு மீள
இறையவன் அருளின் காந்தி
எழுந்தது புவியில் நெஞ்சே!

என்று பாடுகிறார்.

"சுயராஜ்ஜியம் எனது பிறப்புரிமை; அதை அடைந்தே தீருவோம்" என்று, முழுக்கமிட்டவர் திலகர். 'கீதா ரகசியம்' எழுதிய திலகர் 'கிளம்புங்கள் போருக்கு' என்று முழக்கமிட்டதை

ஓதுகின்ற யோகத்தால் பயன்கண்டாலும்
ஒருவர்க்கே பயனன்றிப் பிறருக் கில்லை!
மோதுகின்ற அறியாமை மிகுந்த நாட்டார்
யோகமெனும் மொழியினிலோர்மோகம் கொள்வார்
ஆதலினால் நீ இறத்தல் இல்லை தேகம்
அழிவதொன்றே என்னுமொரு சொல்லை மட்டும்
கீதையிலே இருந்தெடுத்துத் திலகன் காட்டிக்
'கிளம்புங்கள் பணிக்' கென்று முழக்கம் செய்தான்.

என்று திலகர் பெருமான் கட்டளையைப் பாரதிதாசன் பாரதத் திருநாட்டுக்குணர்த்துகிறார்.