உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாரதிதாசன், முருகு சுந்தரம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புரட்சிக்கவி

49

பொத்தல்இலைக் கலமானார் ஏழை மக்கள்
புனல் நிறைந்த தொட்டியைப் போல் ஆனார் செல்வர்
புதுக்கணக்குப் போட்டுவிடு, பொருளை எல்லாம்
பொதுவாக எல்லார்க்கும் குத்தகை செய்!

என்று கட்டளை இடுகிறார்.

ஓடப்பராயிருக்கும் ஏழை யப்பர்
உதையப்பராகிவிட்டால் ஓர்நொடிக்குள்
ஓடப்பர் உயரப்பர் எல்லாம் மாறி
ஒப்பப்பர் ஆய்விடுவார்,உணரப்பா நீ!

என்று எச்சரிக்கையும் விடுக்கிறார். தம்முடைய புரட்சிக் கருத்துக்களைத் தாலாட்டுப் பருவத்திலேயே துவங்குகிறார்.

அள்ளும் வறுமை அகற்றாமல் அம்புவிக்குக்
கொள்ளைநோய் போல் மதத்தைக் கூட்டியழும்
வைதீகத்தைப்
போராடிப் போராடிப் பூக்காமல் காய்க்காமல்
வேரோடு பேர்க்க வந்த வீரா இளவீரா!

என்று ஆண் குழந்தைகட்கும்,

மூடத்தனத்தின் முடைநாற்றம் வீசுகின்ற
காடு மணக்கவரும் கற்பூரப் பெட்டகமே!
வேண்டாத சாதி இருட்டு வெளுப்பதற்குத்
தூண்டா விளக்காய்த் துலங்கும் பெருமாட்டி

என்று பெண் குழந்தைகட்கும் தாலாட்டுப் பாடுகிறார்.

சாதிமத பேதங்கள் மூட வழக்கங்கள்
தாங்கிநடை பெற்றுவரும் சண்டை யுலகிதனை
ஊதையினில் துரும்புபோல் அலக்கழிப்போம்;பின்னர்
ஒழித்திடுவோம்; புதியதோர் உலகு செய்வோம்