பக்கம்:பாரதிதாசன், முருகு சுந்தரம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

பாரதிதாசன்

என்று மக்களை அறைகூவி அழைக்கிறார். பொதுவுடைமை நாடுகளில் உண்டாக்கப்பட்ட 'பொதுவில்லம்' (Commune) போல நாட்டு மக்களிடை அமைக்கும் முயற்சியைத் தாம் எழுதியுள்ள 'காதலா? கடமையா?' என்றநூலின் இறுதியில் வெளிப்படுத்துகிறார் பாரதிதாசன்.

மன்னராட்சியை ஒழித்து மக்களுக்கு விடுதலை வாங்கிக் கொடுத்த மகிணனிடம் அவன் தந்தை சில வினாக்களை எழுப்புகிறார். அதற்கு மகனும் ஏற்ற விடையிறுக்கிறான்.

உனையொன்று கேட்பேன் உரையடா என்று
முதிய தந்தை மொழியலானர்.
ஏரி தோண்ட இல்லையே என்றார்
இல்லை என்ப திராதென்றான் மகன்
திருக்கிளர் நாட்டின் செல்வர் கட்கும்
இருக்கக் குடிசை இல்லை என்றார்
இல்லை என்றசொல் இராதினி என்றான்
கடல்நிகர் நாட்டின் கணக்கிலா மக்கள்
உடல்நல மில்லா தொழிந்தனர் என்றார்
இல்லை என்பதே இராதினி என்றான்
எப்படி அரசியல் என்றார் கிழவர்
ஒப்பிட எவர்க்கும் ஒருவீடு ஒருநிலம்
ஒரு தொழில் ஓர் ஏர்,உழவு மாடுகள்
விரைவிற் சென்றால் தருவார் என்றான்.

'கடற் மேற்குமிழிகள்' என்ற காப்பியத்தில் முடியாட்சி ஒழிக்கப்பட்டுக் குடியாட்சி மலர்ந்தது. குடியாட்சியில் எல்லார்க்கும் எல்லாம் கிடைக்க வேண்டுமல்லவா? குடியாட்சித் தலைவனின் ஆணைப்படி முரசு அறையப்படுகிறது ஊரெல்லாம்.

யானைமேல் வள்ளுவன்
இயம்புவான் முரசறைந்து;
“பூனைக்கண் போலும் பொரிக்கறிக்காக
ஆளுக் கிரண்டு கத்தரிக்காய் அடைக
செங்கை இரண்டளவு சீரகச் சம்பா
அடைக அங்கங்கு மக்கள் அனைவரும்