பக்கம்:பாரதிதாசன், முருகு சுந்தரம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இயற்கைக் கவிஞர்

67

தொங்கும் விழுதையும் தனது வாலையும் பாம்பென்று எண்ணிக் குரங்கு போடும் குதியாட்டம் சுவைத்தற் கினியது:

கிளையினில் பாம்பு தொங்க
விழுதென்று, குரங்கு தொட்டு
“விளக்கினைத் தொட்ட பிள்ளை
வெடுக்கெனக் குதிப்பதைப்போல்
கிளைதொறும் குதித்துத் தாவிக்
கீழுள்ள விழுதை யெல்லாம்
ஒளிப்பாம் பாய் எண்ணி எண்ணி
உச்சி போய்த் தன்வால் பார்க்கும்"

சில இடங்களில் இயற்கையழகை மனிதாபிமானத்தோடு சேர்த்துப் பிசைந்து கொடுக்கிறார். இயற்கை அழகில் உள்ளத்தைப் பறிகொடுத்தாலும் ஏழை மக்களை அவர் மறப்பதில்லை.

முற்றிய குலைப்பழத்தை
முதுகினில் சுமந்து நின்று
"வற்றிய மக்காள் வாரீர்"
என்றது. வாழைத் தோட்டம்

என்று பாடும்போது, 'வற்றிய மக்களின் வறுமை' வந்து முன்னால் நிற்கிறது.

கிளியைப் பற்றிப் பாடும்போது, அதன் சிறப்பொன்றைச் சுட்டிக் காட்டுகிறார். கிளிக்கு ஏழை பணக்காரர் என்ற வேறுபாடு கிடையாது இருவரையும் தன் கொஞ்சு மொழியால் மகிழ்ச்சியூட்டுகிறது. ஏழைகள் விரும்பியூட்டும் நைந்த பழத்தையும் கூழையும் விரும்பிச் சாப்பிடுகிறது.

கொஞ்சுவாய் அழகு தன்னைக்
கொழிப்பாய்நீ, அரசர் வீட்டு
வஞ்சியர் தமையும் மற்ற
வறியவர், தமையும், ஒக்க