பக்கம்:பாரதிதாசன், முருகு சுந்தரம்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1934ஆம் ஆண்டு இரணியனைப் பெரிய தமிழ் வீரனாகச் சித்திரித்து 'இரணியன்' அல்லது 'இணையற்ற வீரன்' என்ற நாடகத்தை எழுதிப் பெரியார் தலைமையில் அரங்கேற்றினார். அந்நாடகத்தில் குத்துசி குருசாமி இரணியனாகவும், சத்தியவாணி முத்து இரணியன் மனைவியாகவும், திருவாசகமணி கே.எம். பாலசுப்பிரமணியம் பிரகலாதனாகவும் நடித்தனர் என்பது குறிப்பிடத்தக்க செய்தி. அந்நாடகம் அன்றைய தமிழக அரசால் தடை செய்யப்பட்டது.

நாடகங்களைப் பொறுத்த வரையில் இளைஞர்களுக்காகவும், பெரியவர்களுக்காகவும் நாற்பத்தெட்டு நாடகங்கள் எழுதியுள்ளார். அவற்றுள் குறிப்பிடத்தக்கவை குமர குருபரர், தமிழச்சியின் கத்தி, கற்கண்டு, நல்ல தீர்ப்பு, லதாக்ருகம், செளமியன், அமிழ்து எது? சமணமும் சைவமும், அம்மைச்சி, தலைமலை கண்ட தேவர், கோயில் இருகோணங்கள், குடும்பவிளக்கும் குண்டுக்கல்லும், அமைதி (ஊமைநாடகம்), பிசிராந்தையார் என்பன. பிசிராந்தையார் நாடகம் சாகித்திய அகாதமியின் பரிசு பெற்ற நாடகம்.

நடிப்புக்கலை பாரதிதாசன் குருதியில் ஊறியது என்று சொல்லலாம். 1944ஆம் ஆண்டில் அவரே 'இன்ப இரவு' என்ற பெயரில் ஒரு நாடகக் குழுவைத் துவக்கினார். நாமக்கல் செல்லப்ப ரெட்டியார் என்பவர் அக்குழுவை முன்னின்று நடத்தினார். பாரதிதாசன் படைப்புக்களில் உள்ள முத்தமிழ்க் காட்சிகளும் இன்ப இரவில் இடம் பெற்றன. கவிஞர் சுரதா, ஜனாதிபதி பரிசு பெற்ற ஒவியர் வேணுகோபால சர்மா, இசை மேதை ஞானமணி போன்றவர்களும் வேறுசில நாட்டிய மேதைகளும் அக்குழுவில் இடம் பெற்றிருந்தனர். முதன் முதலாக சேலம் நகரில்தான் 'இன்ப இரவு' அரங்கேறியது.

நாடகத்தில் ஈடுபாடு மிக்க பாரதிதாசனின் கவனம் திரைப்படத் துறையிலும் திரும்பியது. 1937 ஆம் ஆண்டு 'பாலாமணி அல்லது பக்காத் திருடன்' என்ற திரைப்படத்துக்குப் பாடல்களும், 1940 ஆம் ஆண்டில் 'கவி காளமேகம்' என்ற திரைப்படத்துக்குத் திரைக்கதை, உரையாடல் பாடல்களும் எழுதினார். 1938ஆம் ஆண்டு எழுத்தாளர் வ.ரா.வின் விருப்பத்திற்கிணங்க 'இராமானுஜர்' என்ற படத்துக்கும் பாடல்கள் எழுதினார். பாலாமணியில் டி.கே. சண்முகம்