பக்கம்:பாரதிதாசன், முருகு சுந்தரம்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சகோதரர்களும், கவிகாளமேகத்தில் நாதசுவரச் சக்கரவர்த்தி திருவாவடுதுறை இராசரத்தினமும் நடித்தனர்.

பாரதிதாசன் கலைத்துறை வாழ்வில் சேலம் முக்கியப் பங்கு வகிக்கிறது. சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தார் எடுத்த ஆயிரம் தலைவாங்கிய அபூர்வசிந்தாமணி(1945) சுபத்திரா(1946) சுலோசனா(1947) வளையாபதி(1952) ஆகிய திரைப்படங்களுக்கு திரைக்கதை உரையாடல் பாடல்கள் எழுதினார். இவருடைய 'எதிர்பாராத முத்தம்' என்ற காவியம் 'பொன்முடி' என்ற பெயரால்(1950) திரைப்படம் ஆக்கப்பட்டது.

நாடகப்பித்தும், திரைப்படத்துறையின் தொடர்பும் பாரதிதாசனை வன்மையாக ஈர்த்த காரணத்தால், திரைப்படம் பிடிக்கும் நோக்கத்தோடு 1961 ஆம் ஆண்டு அவர் புதுவையிலிருந்து சென்னைக்குக் குடி பெயர்ந்தார். அவர் கையில் திரைப்படம் எடுக்கப் போதிய வசதியோ, பொருளோ இல்லாத நிலையில் புதுச்சேரியில் இருந்த வீட்டை அடகு வைத்துக் கிடைத்த பணத்தை எடுத்துக் கொண்டு வந்தார். சில நண்பர்களையும் பங்குதாரர்களாகச் சேர்த்துக் கொண்டார். சென்னை தியாகராய நகர் இராமன் தெருவில் இருந்த 10 ஆம் எண் வளமனையின் முன்பகுதியை வாடகைக்கு எடுத்து அதில் தமது 'பாரதிதாசன் பிக்சர்ஸ்' என்ற திரைப்படக் கம்பெனியைத் துவக்கினார். பழைய பியட் கார் ஒன்று வாங்கி அதற்கு ஓர் ஒட்டுநரையும் அமர்த்தினார். அலுவலகத்துக்குத் தேவையான ஆட்களையும் ஏற்பாடு செய்து அமர்க்களப் படுத்தினார். முதலமைச்சர் காமராசரை அழைத்துப் பாரதிதாசன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் துவக்கவிழா நடத்தினார். 'பாண்டியன் பரிசு' என்ற தமது காப்பியத்தைத் திரைப்படமாக்குவது அவர் நோக்கம். திரைப்பட நடிகர்கள் இயக்குநர்கள் இசை வல்லுநர்கள் விழாவில் கூட்டமாகக் கலந்து கொண்டனர். காப்பியத் தலைவன் வேலன் வேடத்தில் சிவாஜி கணேசனும், காப்பியத் தலைவி அன்னம் வேடத்தில் சரோஜா தேவியும் நரிக்கண்ணன் வேடத்தில் எம்.ஆர்.இராதாவும் நடிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அவர்களும் ஒத்துக் கொண்டனர்.

திரைப்படத்துறை என்பது ஒரு பெரிய கடல் போன்றது. பெரிய பணக்காரத் திமிங்கிலங்களும், சுறாமீன்களும் உலாவரும் இடம். அதில் தம்மை ஈடுபடுத்தி வெற்றி கொள்ளும் திறமை