பக்கம்:பாரதிதாசன், முருகு சுந்தரம்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96

பாரதிதாசன்

ஏமாந்து போகாதீர், நீங்கள் கவிதை எழுதுவதில் கவனம் செலுத்துங்க” என்று கூறினார். பாரதிதாசன் கவனம் கவிதையின் பக்கம் மீண்டும் திரும்பியது. தாம் எழுதி வைத்திருந்த மணிமேகலை வெண்பா, கண்ணகி புரட்சிக் காவியம் இரண்டையும் வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டார். அன்பு நூலக உரிமையாளர் திருவாளர் இராமரத்தினம் அவர்கள் அவ்விரண்டு நூல்களை அழகாக அச்சிட்டு வெளியிட்டார்.

வீண் செலவினங்களைக் குறைக்கும் முகத்தான், தாம் குடியிருந்த வளமனையின் முன்பகுதியைக் காலி செய்துவிட்டுப் பின்பகுதியில் இருந்த சிற்றில்லில் பாரதிதாசன் குடியேறினார். பாவேந்தர் நூல்களை வெளியிடும் உரிமை பெற்ற அன்பு நூலகத்தில் பணி செய்யத் திரு. பொன்னடியான் அனுப்பப்பட்டார். குயில் ஏடும் நிறுத்தப்பட்டது.

பாவேந்தரின் பாண்டியன் பரிசு என்னும் திரைப்படக் கனவு, முட்டாள் முத்தப்பா வாகத்தேய்ந்து உள்ளத்தினின்றும் மறைந்தது. ஆனால் அவர் வாழ்வின் கடைசி விருப்பமாகப் பாரதியார் வாழ்க்கையை யாவது திரைப்படம் ஆக்க வேண்டுமென்று விரும்பினார். உடல் நிலை சரியில்லாத நிலையிலும் இரவு பகலாகப் பாரதி படத்திற்கான திரைக் கதை வசனத்தை எழுதி முடித்தார். அப்படப் பிடிப்புக்கென ஒரு திட்டத்தையும் உருவாக்கினார். நாட்டு மக்களையே பங்குதாரர்களாக ஆக்கி, அவர்களிடமிருந்தே பணம் தண்டி இப்புனிதப் பணியை முடிக்க விரும்பினார். அதற்குரிய அறிக்கையும் வெளியிடப்பட்டு, நாடெங்கிலும் நண்பர்கள் மூலம் வழங்கப்பட்டது. அவ்வறிக்கை:

திரைப்படத்தில் மகாகவி பாரதி

தமிழ்ச் சான்றோர்களே!

உலகு தொடங்கிய நாள் முதல் மேம்பட்டு வந்த நம் தமிழ்மொழி - புலவர்களாலும் புரவலர்களாலும் வளர்ந்து வந்த நம் தமிழ்மொழி, பத்தொன்பதாம் நூற்றாண்டை அடைந்தபோது அந்தத் தண்டமிழ் உண்டா இல்லையா என்று நிலையை அடைந்திருந்தது. அந்நிலையில்,