உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாரதிதாசன் கதைப்பாடல்கள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கதைப் பாடல்கள்

59


ஆதலினால் இந்த அழகு மணிபுரியை
ஓதும் குடியரசுக் குட்படுத்த வேண்டுகிறேன்!
அக்கிரமம் சூழ்ச்சி அதிகாரப் பேராசை
கொக்கரிக்கக் கண்ட குடிகள் இதயந்தான்
மானம் உணர்ந்து, வளர்ந்து எழுச்சியுற்றுக்
கானப் புலிபோல் கடும்பகைவர் மேற்பாயும்!
ஆதலினால் காங்கேயன் அக்ரமமும் நன்றென் பேன்;
தீதொன்றும் செய்யாதிருசேனாபதிதனக்கே!

மன்னர்கள் :

அவ்வாறே ஆகட்டும் அப்பனே ஒப்பிலாய்!
செவ்வனே அன்புத்திருநாடுவாழியவே!
சேய்த்தன்மை காட்டவந்த செம்மால் செழியன்புத்
தாய்த்தன்மை தந்த தமிழரசி வாழியவே!

சுதர்மன் :

எல்லார்க்கும் தேசம், எல்லார்க்கும் உடைமைஎலாம்
எல்லார்க்கும் எல்லா உரிமைகளும் ஆகுகவே!
எல்லார்க்கும் கல்வி சுகாதாரம் வாய்ந்திடுக!
எல்லார்க்கும் நல்ல இதயம் பொருந்திடுக!
வல்லார்க்கும் மற்றுள்ள செல்வர்க்கும் நாட்டுடைமை
வாய்க்கரிசி என்னும் மனப்பான்மை போயொழிக;
வில்லார்க்கும் நல்ல நுதல்மாதர் எல்லார்க்கும்
விடுதலையாம் என்றே மணிமுரசம் ஆர்ப்பீரே!

1937