பக்கம்:பாரதியின் இலக்கியப் பார்வை.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதியின்




ஔவையார்பால் அளவற்ற மதிப்பு உண்டு. இது முன்னரும் காட்டப்பட்டது. “யாமறிந்த புலவரிலே” உள்ள மூவரில் ஔவையார் இல்லையென்றாலும், தமது கவிதையிலும் கட்டுரைகளிலும் ஔவையாரைப் போற்றியிருக்கும் உணர்வு குறிக்கத்தக்கது.

“இன்னும் ஔவைப் பிராட்டியின் நூல்களிலுள்ள வசனங்களை உதாரணங்காட்டி அவருடைய மகிமைகளையெல்லாம் விளக்கிக் கூற வேண்டுமாயின் அதற்கு எத்தனையோ சுவடிகள் எழுதியாக வேண்டும்” -என எழுதியிருக்கும் பகுதி ஔவை பற்றிய அவரது ஆர்வத்தை அளவிட்டுக் காட்டுகின்றது. இப் பகுதியில் இதனைத் தொடர்ந்து எழுதுகின்றவர், -

“இந்தக் கவியரசியைக் குறித்து” -எனக் கவியரசிப் பட்டஞ் சூட்டியுள்ளார்.

தமது பாப்பாப் பாட்டில்,

“சாதி இரண்டொழிய வேறில்லை என்றே
தமிழ்மகள் சொல்லி சொல் அமிழ்தம் என்போம்”
-என்று குறித்திருப்பதை அறிவோம்.

இதில் ஔவையைத் “தமிழ்மகள்” என்றும் அவர் சொல் “அமிழ்தம்” என்றும் குறித்தமை கருதத்தக்கது. ஔவையாரது ஆத்திசூடி பாரதியாரை மிகக் கவர்ந்தது அதனை ஒரு நல்லிலக்கியமாகக் கருதினார். தனது இலக்கியப் படைப்பிற்கு ஒரு வழிகாட்டியாகக் கொண்டார். ஆத்திசூடி அவரைக் கவர்ந்ததற்குச் காரணம் அதன் சொற் சுருக்கமே. இச்சொற்சுருக்கம் கருதி ஔவையாரை மிகப் பாராட்டியுள்ளார்.

60