பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை 2

மகாகவி பாரதியாரின் படைப்புகளில், அவருடைய கவிதைகளில் தேசபக்திக் கவிதைகள் மிகவும் சிறப்பானவை. அதனாலேயே அவர் தேசிய மகாகவி என்றும் சிறப்பாக அழைக்கப்படுகிறார். தேசபக்தி நிரம்பிய கவிதைகளுடன் பாரதி படைத்துள்ள தெய்வ பக்திக் கவிதைகள், கண்ணன் பாட்டு, சுயசரிதைப் பாடல்கள், தமிழ் நாட்டைப் பற்றிய பாடல்கள், பாப்பாப் பாட்டு, பெண்ணுரிமைப் பாடல்கள், பாஞ்சாலி சபதம், குயில்பாட்டு மற்றும் பல தலைப்புகளிலும் அவர் பாடியுள்ள கவிதைகள் கருத்தாழம் மிக்கவை. பாரதப் பண்பாட்டு தளத்தின் மூலவேரிலிருந்து எழுந்தவை. தேசபக்தியும் தெய்வ பக்தியும் இணைந்தவை.

பாரதி வெறும் கவிஞராக மட்டும் மகாகவியாக மட்டும் இருக்கவில்லை. அவர் ஒரு தலை சிறந்த எழுத்தாளராக, பத்திரிகையாளராக, கட்டுரையாளராக விளங்கினார். அவர் காலத்தில் தமிழில் உரைநடை இலக்கியம் ஆரம்ப நிலையில் இருந்தது. இன்று தமிழ் உரைநடைக்கு ஏற்பட்ட வளர்ச்சிக்கு பாரதி ஆற்றியுள்ள பங்கு மகத்தானது. பாரதி தமிழ் உரைநடைக்கு ஒரு இலக்கணமே வகுத்தார்.

தமிழ் வசன நடையைப் பற்றிக் குறிப்பிடும்போது பாரதி, “தமிழ் வசன நடை இப்போது தான் பிறந்தது. பல வருஷமாகவில்லை. தொட்டிற்பழக்கம் சுடுகாடு மட்டும். ஆதலால், இப்போதே நமது வசனம் உலகத்தில் எந்த பாஷையைக் காட்டிலும் தெளிவாக இருக்கும்படி முயற்சிகள் செய்ய வேண்டும். கூடியவரை பேசுவது போலவே எழுதுவது தான் உத்தமம் என்பது என்னுடைய ககூஜி. எந்த விஷயம் எழுதினாலும் சரி, ஒரு கதை அல்லது ஒரு தர்க்கம், ஒரு சாஸ்திரம், ஒரு பத்திரிகை விஷயம், எதை எழுதினாலும் வார்த்தை சொல்லுகிற மாதிரியாகவே அமைந்துவிட்டால் நல்லது”