பக்கம்:பாரதியின் தேசீயம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர் வாழிய பாரத மணித்திரு நாடு பாரத சமுதாயத்தின் உயரிய பெரிய குடும்பத்தில் வங்கத்தாயையும், தெலுகு தல்லியையும், தமிழ்த்தாயையும் மற்றுமுள்ள சகோதரிகளையும் பாரதி காண்கிறார். பாரதத்தின் பகுதியாக தமிழகத்தின் தனிச் சிறப்புகளை பெருமைப் படுத்திக் காண்கிறார். பட்டுத்துகிலுடுத்திய செந்தமிழ்த்தாயின் பேரொளியைப் பாரதி காண்கிறார். வேதம் நிறைந்த தமிழ் நாடு, உயர் வீரம் செரிந்த தமிழ்நாடு, நல்ல காதல் புரியும் அரம்பையர் போல் இளங் கன்னியர் சூழ்ந்த தமிழ் நாடு கவிஞனின் கண் முன் காணப்படுகிறது. காவிரி, தென்பண்ணை, பாலாறு வையை, பொருனை நதி மற்றும் பல புண்ணிய ஆறுகள் பாய்ந்து தமிழ்த்தாயின் மேனி செழித்து நிற்பதைக் கவிஞர் காண்கிறார். முத்தமிழ் மாமுனி வாழும் நீண்ட மலை காத்து நிற்கும் தமிழ் நாட்டைக் கவிஞர் காண்கிறார். உலகில் உள்ள செல்வங்கள் அனைத்தும் குவிந்து கிடக்கும் தமிழ் பூமியைக் காண்கிறார். * நீலத்திரை கடலோரத்தில் நின்று நித்தம் தவம் செய்யும் குமரி எல்லை வட மாலவன் (திருவேங்கட மலை) குன்றம் இவற்றிடையில் புகழ் மண்டிக்கிடக்கும் தமிழ் அன்னையைப் பாரதி காண்கிறார். கம்பன் பிறந்த தமிழ் நாட்டையும், கல்வியில் சிறந்த தமிழ் நாட்டையும், நல்ல பல சாத்திரங்களின் மணம் பாரெங்கும் வீசும் தமிழ் நாட்டையும், வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான் புகழ் கொண்ட தமிழ் நாட்டையும், நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்னும் ஓர் மணி ஆரம் படைத்த தமிழ் நாட்டையும் கவிஞர் பிரான் தனது கண்முன் காண்கிறார்.