பக்கம்:பாரி வேள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எங்கே பார்த்தாலும் சுனைகள்; பெரியனவும் சிறியனவுமாகப் பல சுனைகள் இருக்கின்றன. கண்ணாடியைப் போலத் தெள்ளத் தெளிந்த நீர் நிறைந்த சுனைகள் அவை. பெரிய சுனைகளில் குவளை மலர்கள் மலர்ந்திருக்கின்றன.

சில இடங்களில் மூங்கில்கள் அடர்ந்து வளர்ந்திருக்கின்றன. மூங்கிற் காடு என்றே சொல்லவேண்டும். பல காலமாக வளர்ந்தவையாதலால் வானுறவோங்கி நிற்கின்றன. பல மூங்கில்களில் நெல்லைக் காணலாம்.

இயற்கைத் தேவி தன்னுடைய எழில் நலங்களை வஞ்சகமின்றி வாரி வழங்கியிருக்கும் இடம் இது. மலையின்மேல் உள்ள விரிவான பரப்பில் இந்தக் காட்சிகளைக் காண்கிறோம். மலைச் சாரல்களிலோ கண்ணைக் கவரும் வேறு பல காட்சிகள் உள்ளன. அங்கங்கே காட்டை அழித்துத் தினையை விதைத்து அந்நிலத்து மக்கள் பயிர் பண்ணியிருக்கின்றனர். ஒரு சார் வரகை விதைத்துப் பயிர் செய்கின்றனர். தினைக் கொல்லையினூடே அவரையையும் மொச்சையையும் போட்டுக் கொடிகளை ஒடவிட்டிருக்கின்றனர். சில இடங்களில் எள்ளுச் செடிகள் தளதளவென்று வளர்ந்திருக்கின்றன.

சலசலவென்று ஓடும் அருவிகள் சில இம் மலைச் சாரலை அழகு செய்கின்றன. மழைக்குப் பஞ்சமே இல்லாத இந்த மலையில் அருவியில் ஒரு கணமாவது நீர் குறைவதில்லை. நெடுந்துாரத்திலிருந்து பார்க்கிறவர்களுக்கு இவ்வருவிகள் மெல்லிய துகில் அசைவது போலத் தோன்றும்.

இதுதான் பறம்பு மலை; குறிஞ்சி நிலத்துக்குரிய வளப்பம் அனைத்தும் குறைவின்றி நிறைந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரி_வேள்.pdf/11&oldid=958526" இலிருந்து மீள்விக்கப்பட்டது