பக்கம்:பாரி வேள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விளங்கும் மலை; தமிழ்ப் புலவர்களின் பாடல்களில் என்றும் மாயாமல் வாழும் பாரி வேளின் மலை.

எளிதில் உணவுப் பொருள்கள் இங்கே கிடைக்குமானாலும் இங்குள்ள மக்கள் சோம்பல் இல்லாமல் பல தொழிலும் செய்வார்கள். தினையை விதைத்துப் பயிர் செய்து பாதுகாப்பது, வரகு, எள் முதலியவற்றை விளைப்பது, பலாப்பழங்களைக் கொண்டுவந்து அவற்றிலுள்ள கொட்டைகளை எடுத்து மாவாக்குவது முதலிய செயல்களில் ஈடுபடுவார்கள். மலைக்குக் கீழே உள்ள ஊர்களுக்கு மலையில் விளையும் பண்டங்களாகிய சந்தனம், தேன் முதலியவற்றைக் கொண்டு போய் விற்று விட்டு, நெல், உப்பு முதலிய பண்டங்களை வாங்கி வருவார்கள்.

பறம்பு மலையின் நடுவில் மக்கள் வாழும் ஊர் இருந்தது. அதன் நடுவே இறைவன் திருக்கோயில் ஒன்று உண்டு. பாரி வேள் அவ்விடத்தில் அரண்மனை கட்டி வாழ்ந்து வந்தான். தனக்கு வேண்டிய அளவுக்கு ஒரு சிறு மாளிகை கட்டிக்கொண்டு அதில் இருந்து வந்தான். அவனுடைய வீரமும் கொடையும் தமிழ் நாடு முழுவதும் அறிந்தவை. ஆதலால் நாள் தோறும் பல இடங்களிலிருந்து அவனைப் பார்க்கப் புலவர் பெருமக்கள் வந்து செல்வார்கள்.

பாண்டி நாட்டில் இன்று பிரான்மலை என்ற பெயரோடு விளங்கும் மலையே பாரி வாழ்ந்திருந்த பறம்பு மலை. சேர நாட்டிலிருந்தும் சோழ நாட்டிலிருந்தும் பாண்டி நாட்டிலிருந்தும் பல புலவர்கள் ஆறுகள் கடலை நோக்கி வருவதுபோல வந்து கொண்டே இருப்பார்கள். பாரி முடியுடை மன்னர்களாகிய சேர சோழ பாண்டிய மன்னர்களைப் போன்றவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரி_வேள்.pdf/12&oldid=958527" இலிருந்து மீள்விக்கப்பட்டது