பக்கம்:பாரி வேள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அல்லன்; அவன் ஆட்சியின் கீழ்ச் சோழ நாட்டைப் போன்ற பெரிய மண்டலம் அமைந்திருக்கவில்லை. அவன் குறுநில மன்னர்களில் ஒருவன். அக்காலத்தில் தமிழ் நாட்டில் குறுநில மன்னர் பலர் இருந்தனர்; சிறு சிறு நாடுகளைத் தங்களுடைய ஆட்சி நிலமாகக் கொண்டு வாழ்ந்து வந்தனர். அவர்களை வேளிர் என்று சொல்லுவார்கள். அவர்கள் கோட்டை, நாடு, நகரம், மலை முதலியவற்றை உடையவராக இருந்தாலும் பெரிய நிலப்பரப்பை ஆட்சி புரியாமையால் குறு நில மன்னர்களாக இருந்தார்கள். பிற்காலத்தில் ஜமீன்தார் என்று வழங்கியவர்களைப் போன்றவர்கள் அவர்கள் என்று சொல்லலாம்.

பாரி அத்தகைய வேளிருக்குள் ஒருவன். அவனைப்போல ஆய், காரி முதலியவர்கள் தமிழ் நாட்டில் இருந்தார்கள். பாரியின் ஆட்சிக்கு உட்பட்ட நாட்டுக்குப் பறம்பு நாடு என்று பெயர் வழங்கியது. முந்நூறு ஊர்களை உடைய அந்த நாட்டினிடையே உயர்ந்து ஓங்கி நின்றது பறம்பு மலை. அந்த மலையின்மீதே வாழ்ந்தான் பாரி. மலையின்கீழ் உள்ள ஊர்களுக்கும் வந்து சில முறை தங்குவான். புலவரை எதிர்கொண்டழைக்க மலையை விட்டு வருவதும் உண்டு.

தன்னை நாடி வந்த புலவர்களுக்குப் பாரி நல்கும் பொருள்களுக்கு எல்லை இல்லை. தேர் கொடுப்பான்; குதிரை கொடுப்பான்; ஊர் கொடுப்பான். பாணர்களுக்குத் துகிலும் பட்டும் அளிப்பதோடு பொன்னாற் செய்த பூவை அளிப்பான். அக் காலத்தில் இது தமிழ் நாட்டில் இருந்து வந்த வழக்கம். பொற் பூவைப் பெற்று மகிழ்ந்தார்கள் பாணர்கள். பாணர்களோடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரி_வேள்.pdf/13&oldid=958528" இலிருந்து மீள்விக்கப்பட்டது