பக்கம்:பாரி வேள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வரும் விறலியர்கள் ஆடிப் பாடி இன்புறுத்துவார்கள். அவர்களுக்குப் பொன்னாலான அணிகலன்களை வழங்குவான் பாரி. கூத்தில் வல்ல கூத்தர் வருவர். அவர்களும் பலவகைப் பரிசிலைப் பெற்றுச் செல்வார்கள்.

புலவர், பாணர், விறலியர், கூத்தர் ஆகிய கலைஞர்கள் எப்போதும் ஊர் ஊராகச் சென்று கொண்டே இருப்பார்கள். எங்கே பழம் கிடைக்கும் என்று தேடிச் செல்லும் பறவைகளைப் போலவும், தேன் உள்ள மலர்களை நாடிப் பறந்து போகும் வண்டுகளைப் போலவும் கலைநயம் தெரிந்து பாராட்டிப் பரிசு அளிக்கும் வள்ளல் எங்கே இருக்கிறான் என்று ஆராய்ந்து தேடி நாடிச் செல்லும் இயல்புடையவர்கள் அவர்கள். யாரேனும் ஒரு வள்ளலை அணுகி அவனிடம் பரிசு பெற்றால் அவன் பெருமையைப் பாராட்டுவார்கள். புலவர்கள் இனிய பாடல்களால் புகழ்வார்கள். தம்மை ஒத்த கலைஞர்கள் எதிர்ப்பட்டால் அவர்களிடம் அந்த வள்ளலின் பெருமையை எடுத்துச் சொல்லி, "நீங்களும் அங்கே போங்கள்; உங்களுக்குப் பரிசு கிடைக்கும்" என்று தூண்டுவார்கள்.

வெறும் பரிசைக் கருதி மாத்திரம் அவர்கள் ஒருவரை அணுகுவதில்லை. தம்முடைய கலைத் திறத்தை நன்கு உணர்ந்து நுகர்ந்து இன்புற்றுப் பரிசில் வழங்குபவரையே அவர்கள் அணுகினார்கள். கலையின் தரத்தை உணரும் வள்ளல்களையே அவர்கள் நாடினார்கள். வரிசை அறியாத பேய்க் கொடையாளர்களிடம் அவர்களுக்கு மதிப்பு உண்டாவதில்லை.

பாரி வரிசை அறிந்து வழங்கும் வள்ளல். புலவர் பெருமக்களின் பொற்பை உணர்ந்து போற்றும் இயல்பும் புலமையும் உடையவன். பாணர்களின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரி_வேள்.pdf/14&oldid=958529" இலிருந்து மீள்விக்கப்பட்டது