பக்கம்:பாற்கடல்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

104

லா. ச. ராமாமிருதம்


அவன் சீதையைக் கண்டுபிடித்துக் கொடுக்காவிட்டால், கதை என்கிற ரீதியில் அதற்கடுத்த யுத்தகாண்டம் கிடையாது. பட்டாபிஷேகம் கிடையாது. உத்தர காண்டத்தை விட்டுத்தள்ளு; அது வண்ணான் வண்ணாத்தி அக்கப்போர்; நடந்துபோன காரியங்களுக்குச் சாக்குகள்; சமாதானங்கள் - ஆனால் இந்த ஹனுமான் ஒரு ஆச்சரியமான சிருஷ்டி. ராம ஜெபத்தின் சொரூபமே அவன்தானே ! ராம - இரண்டெழுத்து வார்த்தைதான். ஆனால் மந்திரம்னு எடுத்துண்டால், வெறும் உச்சரணை - திரும்பத் திரும்பச் சொல்வதற்கே என்ன சக்தி ! அப்புறம், எத்தனையோ சக்திகளுக்கு உறைவிடமாக இருந்தும் தன்னை மறந்திருந்தானாம்! அப்போ ஞாபகப்படுத்தறவன் ஞாபகப்படுத்த வேண்டிய முறையில் ஞாபகப்படுத்தினால் மனித சக்திக்கு எல்லையே இருக்காது போல இருக்கே! அதற்கு எடுத்துக்காட்டுதானே ஆஞ்சனேயன், குரு என்கிறவன் புதுசா என்ன உபதேசம் பண்ணுகிறான் ? புதுசாக உபதேசிக்கவே என்ன இருக்கு? ஞாபகப்படுத்துகிறவன் குரு. அப்படித்தானே? தன் உணர்வு என்பதுதானே அனுமத் ப்ரபாவம்!"

விழிகள் தளும்ப தாத்தா வாயடைத்து உட்கார்ந்திருக்கிறார். அணையப்போகிற சுடர் கடைசிக் கொழுந்து விடுகிறது. இனி இதுபோல் பேச்சு ஏது?

சொன்னபடியே பொலபொலவென விடிநேரத்தில் அடங்கிக்கொண்டே வரும் மூச்சில் கடைசியாகக் கெட்ட வார்த்தை:

"ஹா - லா - ஸ் - யம்!” மூத்த பிள்ளை பக்கத்தில் இல்லை. சென்னையில் draughtsman course-க்குப் படித்துக் கொண்டிருந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/110&oldid=1533962" இலிருந்து மீள்விக்கப்பட்டது