பக்கம்:பாற்கடல்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாற்கடல்

105


மாரே வெடித்துவிடும் போல் தாத்தா விக்கி அழுதாராம். ஆண்பிள்ளை அழுதால் இன்னமும்கூட அது பயப்படக்கூடிய விஷயம். யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே. ஆனால் இது ஓல மணி, நல்லதற்கல்ல.

நான் இந்தக் குடும்பத்தில் பிறந்தவன்தான். ஆனால் சற்று ஒதுங்கி நின்று இவர்களைப் பார்க்க முயல்கிறேன். யார் இவர்கள் - ஆண், பெண் அடங்கலாக? லேசாகப் பேய் கலந்த தெய்வீகங்களா ? அல்லது அதன் ‘உல்ட்டா‘வா? எனக்கும் ஆரேஞ்ஜ் ஸிக்னல் விழுந்தாகி விட்டது. ஆனால் இன்னமும் இவர்களைச் சிந்திக்கச் சிந்திக்கப் புது வியப்பே காட்டுகிறார்கள்.

இவர்கள் ஒவ்வொருவரிடமும் ஏதோ ஒரு மிகைப்பட்ட தன்மை (abnormality) இருந்தது. அது இவர்கள் பரிணாமத்தை 3-Dஇல் பிதுக்கிற்று. அந்தப் பரிணாமத்தின் விவரம்தான் என்ன ?

இவர்களிடம் ஒரு மேடை ஆக்கிரமிப்பு இருந்தது. யமனிடமிருந்துகூட மேடையைப் பிடுங்கிக்கொள்ள வேண்டும். இது என் கடைசி நிமிஷம். இது என்னுடையது. கடைசிவரை இது என்னுடையதாகவே இருத்தல் வேண்டும்.

என்னுடைய வேளை (moment of truth) வரும்போது இவர்களுக்குரிய வாரிசாய் நான் உயர்வேனா? என் எழுத்து அதற்கு எனக்குக் கை கொடுக்குமோ?

இவர்கள் யதார்த்தத்துக்குச் சற்று புறம்பானவர்கள். இவர்களிடம் ஒரு unreality கமழ்ந்தது. அதனால் இவர்கள் பொய்மையர்கள் என்று அர்த்தமல்ல. ஆனால் உலகத்துக்கும் இவர்களுக்கும் பிணைப்பில் ஏதோ ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/111&oldid=1533963" இலிருந்து மீள்விக்கப்பட்டது