பக்கம்:பாற்கடல்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

146

லா. ச. ராமாமிருதம்


விட்டு அவள் வாயைப் பார்த்துக்கொண்டு சுற்றி உட்கார்ந்திருக்கோமே! பிடுங்கித் தின்றுவிடுவோம்.

இரவு எங்களுக்குக் கதை சொல்வாள். தாத்தா மாதிரி காட்சிகளைத் தத்ரூபமாகக் கண்ணெதிரில் நிறுத்தத் தெரியாவிட்டாலும் நன்றாகச் சொல்வாள். அவள் கூறும் கதை கேட்டுக் கதை அலுத்த குழந்தை ஏது? “நான் பிறந்த கதை சொல்லவா? வளர்ந்த கதை சொல்லவா? பூந்தமல்லி செட்டி வீடு புகுந்த கதை சொல்லவா?“ இந்த வசனத்துக்கு அர்த்தம் எங்களுக்குத் தெரியாது. அவளுக்கும் தெரியாது. ஆனால் இந்த நெற்றிக் குட்டலுடன்தான் அவள் கதை ஆரம்பிக்கும். அவளுடைய ராமஜபம், வழிபாடு, சொந்த ஆர்வத்தினின்று எழுந்ததா? சொல்ல முடியாது. நல்லது என்று பெரியவர்கள் சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்கள். அவர்கள் சொன்னதை, செய்ததை நாமும் செய்வோம்.

எங்கள் பரீட்சைகளுக்கோ, பின்னால் வேலை தேடிச் சென்றபோதோ, அவள் அம்பாளை வேண்டிக் கொள்ளும் விதத்தை மட்டும் சொல்லிக்கொள்கிறேன்.

“பெருந்திருவே, குழந்தைகளின் பேனா முள்ளில் நின்று, அவாளைப் பாஸ் பண்ணவை.“

“பெருந்திருவே, மானேஜர் மனசில் புகுந்து, குழந்தைகளுக்கு வேலை கிடைக்கும்படிப் பண்ணு.“

பேனா முள்ளில் நின்று - ஏதேது, மன்னியா? இல்லை, கம்பன் வீட்டுக் கட்டுத்தறியா?

நிஜமாகவே மன்னிப்பாட்டி ஒன்றும் அறியாதவளா? எல்லாம் தெரிந்தவளா? புதிரே இல்லாத இடத்தில் புதிரைத் தேடுகிறேனா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/152&oldid=1534062" இலிருந்து மீள்விக்கப்பட்டது