பக்கம்:பாற்கடல்.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாற்கடல்

219


முடிந்தவரைதான். முடிந்தவரை முயற்சி செய்து பார்ப்போமே!

51, 52 வாக்கில், 'அமுதசுரபி'யில் பஞ்சபூதக் கதைகள் எனும் சோதனை முயற்சியில் ஜலத்தைப் பிரதான பாத்திரமாக உருவகப்படுத்தி, தரங்கிணி என்கிற தலைப்பில் முதல் கதை வெளிவந்தது. என் சாதகத்தில், இந்த வரிசை ஒரு முக்கியமான முனையெனக் கருதுகிறேன் என்று இப்போதைக்குச் சொல்லி நிறுத்திக் கொள்கிறேன்.

தரங்கிணிக்கு முகப்புப் படமாக என் மனக்கண் கண்ட காட்சி பாறைகளில், படிப்படியாக இறங்கிப் பொங்கிச் சுழித்துக் கொட்டும் நீர்வீழ்ச்சியில், அந்த ஜலத்திலிருந்தே தரங்கிணி என்ற வார்த்தையின் எழுத்துக்கள் தனித்தனியாகத் திரண்டு, உருண்டு, உக்ரகமாகப் பிதுங்குகின்றன. இந்த ideaவை ஸுபா விடம் தெரிவித்துச் சித்திரமாக்கும்படிக் கேட்டேன்.

சரியென்று தலையை ஆட்டினார். ஆனால் ஒரு வாரம் கழித்து, என் idea சாத்தியமில்லையென்று அவர் தெரிவித்ததும் எனக்குப் பெருத்த ஏமாற்றந்தான். வழக்கப்படி ஒரு பெண் முகம் முகப்பாக அமைந்ததும் எனக்குப் பெருத்த கோபமுந்தான். இஷ்டப்படி எதையேனும் வரைந்துவிட்டாலும் கலர், Block, அச்சு என்கிற கட்டங்களில் பிரச்சினைகள் இருக்கின்றன என்பதை நான் அறியமாட்டேன். கற்பனைக்கு உள்ள துராசையும், சுயநலமும் சொல்லுபடி போகாது. ஆயிரம் எண்ணலாம், எத்தனையோ பிரயாசையில் ஒன்று தேறினால் புண்ணியம். மிச்சம் அத்தனையும் பிந்துசேதம். ஆகையால் எங்களையும் இளகிய கண்ணுடன் பார்க்க நியாயம் இருக்கிறது என்று பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/225&oldid=1534327" இலிருந்து மீள்விக்கப்பட்டது