பக்கம்:பாற்கடல்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

லா. ச. ராமாமிருதம்


சொல்லிக் கொள்ளலாம். அது ஒரு கட்டத்துக்குப்பின் உண்மையாகவுமிருக்கலாம். ஆனால் எழுத்தாளனும் மனுஷன்தான். "என் எழுத்து அத்தனையும் மாணிக்கம்; வாசகர்கள் அதற்கு லாயக்கற்றவர்கள்” என்று சாதிக்காமல், தர்க்கம் முற்றினால் கோதாவில் இறங்காமல், தன் எழுத்தில் தன்னம்பிக்கையை மௌனத்தில் நிலைநாட்டினால் பெரிசு. ஆனால் பாராட்டை வேண்டாம் என்கிற மறுப்பை யாரும் நம்ப வேண்டாம். எங்களுக்கும் முதுகு தட்டல் பிடிக்கும், வேணும்.

வேகமாக எழுத வராதவன் நான். அப்பொவேனும் உத்தியோகத்தின் மேல் பழி. இப்போ எனக்குப் பொழுது கூட இருக்கிறது. அப்போவிடக் கூட எழுதுகிறேன் என்று நினைக்கிறேன். ஆனால் சப்ளை சக்திக்கு எனக்கு எப்பவும் போதாது. சிலருக்குப் பாடச் சொன்னால் பாட வராது. வெந்நீர் அறை வித்வத்தை வைத்துக்கொண்டு என்னால் பத்திரிகையின் அவசரத்துக்கு ஈடு கொடுக்க முடியுமா?

ஆனால் லக்ஷமணன் சார் அப்போது என்னைச் சந்தித்து, கதையின் கட்டத்தை நாஸுக்காக விசாரித்துக் கொண்டு, என்னை உற்சாகப்படுத்தி ('ஆஹா ! அடாடா!) நான் கேலி பண்ணவில்லை. அத்தனையும் எனக்கு வேண்டித்தானிருந்தது) ‘அமுதசுரபி’யின் முதலிதழுக்குக் கதையையும் வாங்கிக்கொண்டு போய்விட்டார் என்றால், அது அவருடைய சாமர்த்தியத்துக்குச் சான்று.

கதையும் தன்னை எழுதிக்கொண்டது.

’பூர்வா’ வெளிவந்தது எனக்கு ஒரு முகூர்த்த வேளை. என் வாசக வட்டம் விரிவடைந்தது. "பூர்வா ஒரு புதுவிதமான கவிதா சிருஷ்டி" - ’ஃப்ரீஇண்டியா’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/24&oldid=1532915" இலிருந்து மீள்விக்கப்பட்டது