பக்கம்:பாற்கடல்.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

240

லா. ச. ராமாமிருதம்


இல்லை, போதும், ஒரே அடியாக மிரண்டுவிடப் போகிறீர்கள். கீழே இறங்கிவிடுகிறேன். பூமியே சரணம் ஆயிரம் உயரப் பறந்தாலும், அவ்வப்போது பாதம் பதிய உன் தைரியம் இல்லாவிட்டால், எங்கள் கதி என்ன? அம்மா, நீதான் ஜகன்மாதா! சர்வ ஜனனி! சர்வரக்ஷகி! கடைசியில் உன் குழந்தைகளை மாறாத தூக்கத்தில் உன் மடியில் ஏந்திக்கொள்பவளும் நீயே!

என் சுயசரிதையை அதன் சம்பவ ரீதியில் மட்டும் எழுதுமளவுக்கு அதை நான் முக்கியமாக ஒருநாளும் கருதியதில்லை. என் வரலாறு என்கிற பெயரில் வாழ்க்கையில் கமழும் மணங்களை நுகர, பிறருடன் பங்கிட்டுக்கொள்ள, விசுவதரிசனம் காணச் சுயசரிதை ஒரு சாக்கு அவ்வளவுதான். மற்றபடி என் வாழ்க் கையில் கரடி வித்தைகள், ஆச்சரியகரமான தப்பித்தல்கள் (Escapes), ஜன்னல் கம்பிகளை வளைத்து வெளியேறல்கள், நூலேணியின் மூலம் இராஜகுமாரியின் உப்பரிகையில் புகல், ஏழுபேரை ஒரே அடியில் வீழ்த்தும் தீரச் செயல்கள், ஸாம்ஸன் ஸாஹஸங்கள், Bruce Leeஇன் ஒரு கத்தல், ஒரு குத்தல், ஒரு வீழ்த்தல் இவை போன்ற பராக்கிரமங்களுக்கு எங்கே போவேன்? கேவலம், சப்பணம் போட்டுச் சேர்ந்தாப்போல அரை மணி நேரம் உட்கார முடியவில்லை. கொஞ்ச நாட்களாக வலதுகால் சொன்னதைக் கேட்க மறுக்கிறது. இத்தனைக்கும் முடக்குவாதம் மூட்டுவாதம் என்று வெளிப்படையாகத் தெரியவில்லை. Some trouble; சரி, போகட்டும்.

சுகதுக்கங்களில் என்னிலும் அதிகம் பங்குபட்டவர்கள் இருக்கிறார்கள் என்பதில் எனக்கு எள்ளளவும் ஐயம் இல்லை, இதில்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/246&oldid=1533336" இலிருந்து மீள்விக்கப்பட்டது