பக்கம்:பாற்கடல்.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

312

லா. ச. ராமாமிருதம்


“பதிம்தேஹி! பதிம்தேஹி! பதிம்தேஹி! பதிம்தேஹி! பதிம்தேஹி! பதிம்...” இவள்தான் நளாயினி, அவள்தான் பாஞ்சாலி. இதுவே பாரதம்.

ஆகவே அம்மாவின் தவ பலமோ, முதலியார் பொதுவாகப் பெண்களுக்கென உணர்த்திய வேறு பலமோ, வியாதி பலம் ஒடுங்கி, ஆனால் முடிந்த மட்டும் அதன் பற்களிடையில் அண்ணாவைக் கடித்துக் கசக்கி மென்று விழுங்கப் பார்த்து முடியாமல், கோபத்துடன் உமிழ்ந்துவிட்டது. ஆனால் எப்படிப்பட்ட மீட்சி! அண்ணா, தன் அஸ்தியிலிருந்து எழுந்து வந்தார்.

He cried in a loud voice. Lazarus comes forth.

And he that was dead came forth bound hand and foot with grave clothes and his face was bound about with a napkin. Jesus saith unto them Lose him and let him go.

(St. Jhon, XII. 43,44)

எங்கள் அண்ணா எங்கே? ஏன், உங்கள் அண்ணாவை உங்களுக்கு அடையாளம் தெரியாதா? ஆம். அடையாளம்தான் தெரியறது. உங்கள் அம்மாவுக்காகப் போட்ட பிச்சைதானே! படி அடியில் அக்ஷதை, பிழைச்சுப் போங்கோ.

அண்ணா கடைசிவரை குடுமி வைத்திருந்தார். கசப்பின் வார்ப்பிடத்தில் உதடுகள் நிரந்தரமாக முறுக்கிக் கொண்டுவிட்டன. நெஞ்சின் முள் எலும்பு முண்டிக்கொண்ட உடனே அதன் கீழ் நெஞ்சுக் குழியில் எண்ணெயிட்டுத் திரியேற்றலாம். செழிப்பான அந்த buff கன்னங்கள் ஒளி மங்கி, அவற்றில் சதா ஒரு மருட்சி, கூடவே சிறை வைத்த சீற்றம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/318&oldid=1534444" இலிருந்து மீள்விக்கப்பட்டது