பக்கம்:பாற்கடல்.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாற்கடல்

317


அண்ணா உடம்பு அப்படித்தான் இருந்தது. ஒரு நிலையில் இல்லை. பள்ளிக்கூடத்திலிருந்து வருவார். குஷியாகவே இருப்பார் ட்யூஷன்களைக் குறைத்துக் கொண்டு விட்டதால், அண்ணா இப்போதெல்லாம் எங்களுக்குக் கூடவே கிடைச்சார் எங்களுக்குச் சரியா பேசிண்டு, கும்மாளம் அடிச்சுண்டு, இந்த அண்ணா இத்தனை நாள் எங்கேயிருந்தா? அண்ணா எப்போ தினம் பள்ளிக்கூடத்திலிருந்து திரும்பி வருவா? ராத்திரி எங்களை அணைச்சுண்டு படுத்துப்பா. ஏதோ நாங்கள்லாம் பெரிய மனுஷா மாதிரி பள்ளிக்கூடத்தில் அன்னிக்கு நடந்ததைச் சொல்லுவார்.

“அம்மாப் பொண்ணே, இன்னிக்குக் குழந்தை களோடு சேர்ந்து எனக்கு முற்றத்தில் நிலாச்சாப்பாடு.”

“ஐயே, ஜாலி! ஜாலி!” நாங்கள் கையைக் கொட்டிக் கொண்டு கொக்கரிப்பு. அண்ணா கழுத்தைக் கட்டிக் கலாமான்னு ஆசையாயிருக்கே! ஆனால் அது கூல்டிரிங்கை உறிஞ்சிக் குடிக்கிறான்களே அந்தப் புல்குழாய் மாதிரி முறிஞ்சுட்டா? கழுத்து அவ்வளவு சன்னம் –

“அம்மாப் பொண்ணே ! இன்னிக்கு என்ன சமையல் ?”

அண்ணாவுக்கு ராத்திரி மாதத்தில் 35 நாளைக்குப் புழுங்கலரிசிக் கஞ்சி (கேஸ் பிடிக்கக் காத்திருப்பவர் ஏமாற்றமடையக் கடவர். இதற்கு முன் பக்கங்களில் Poetic licence பற்றி ஒரு பிரசங்கமே நிகழ்த்தியிருக்கிறேன். அதுதான் இது)

பச்சை மணத்தக்காளி வெந்தயக் குழம்பு, கீரை மசியல், வேணும்னா அரிசி அப்பளாம் சுட்டுப் போடறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/323&oldid=1534449" இலிருந்து மீள்விக்கப்பட்டது