பக்கம்:பாற்கடல்.pdf/339

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாற்கடல்

333


பதின்மூன்றாம் நாள் தீண்டல் கழிகிறதாம். புதுத் துணி, விருந்து, சந்தனம் குங்குமத்துடன் மங்கலத்தின் ஸ்வீகரிப்பு. காரியங்கள் யதாப்பிரகாரம் நடக்கின்றன. யாருக்காகவும் எதுவும் காத்திருக்க முடியாது. ஒப்புக் கொள்கிறேன்.

இந்தப் பத்து நாட்களுக்கும் இரவு தித்திப்புடன் பலகாரம் தவிர, அக்ரஹாரத்தில் வசித்தால் ஒருநாள், வீட்டுக்கு வீடு படியேறி முச்சந்திப் பணியாரம் என்று போட வேண்டும்.

சம்பிரதாயப்படி இறந்த ஒரு வருடத்துக்குப் பண்டிகைகள் கொண்டாடலாகாது. ஆனால் சம்பிரதாயங்களுக்கும் பவுடர் பூசி முகத்தை மாற்றியாகிறது. புத்திமதிகளையும் யோசனைகளையும் உதிர்க்கப் பக்கத்து வீடு, எதிர் வீடுகள் இருக்கின்றன. அவர்கள் சௌகரியமாகச் சொல்லும் யோசனைகளை ஏற்க வீட்டுப் பெண்டிர்க்கு வலிக்குமா?

‘மாமியார், நன்னா வயசாகிக் காலமாகி இருக்கிறார். கலியாணச் சாவு! தீபாவளிக்குக் குழந்தைகளை வஞ்சனை செய்யாதே; நீங்கள் பெரியவாள் வேணுமானால் எண்ணெய் தேய்ச்சுக்க வேண்டாம். குழந்தைகளுக்கு யதாப்ரகாரம் நடக்கட்டும், பட்டாசு உள்பட, பக்கத்து வீட்டில் மத்தாப்புக் கொளுத்தினால் இதுகள் ஏக்கமாகப் பார்த்துண்டு இருக்க முடியுமா? நீங்கள் கூட மத்தியானம் புதுசைக் கட்டிண்டுடலாம். ஒரு தடவை தட்டினால் மூணு தடவை போகும். மாமா கிட்டே நான் சொன்னேன்னு சொல்.”

துயரப் பண்டிகை ! கவியாணச் சாவு! பதச் சேர்க்கைகள் எப்படி!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/339&oldid=1534525" இலிருந்து மீள்விக்கப்பட்டது