பக்கம்:பாற்கடல்.pdf/365

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாற்கடல்

359


”சேகர் ! என்னைக் குளிப்பாட்டி விடறியா?” அவமானம் விழியோரம் உறுத்திற்று. ஆனால் என் செய்வது?

சேகர் பதிலே பேசவில்லை. இழுத்து இழுத்துத் தலையில் கொட்டினான்.

ஒருவாறு சாப்பாடு முடிந்து கூடத்தில் சாய்ந்தேன். மிகுந்த ஆயாசம் நாடியைப் பிடித்துப் பார்த்துக் கொண்டேன். பந்தய மைதானத்தில் குதிரை மிரண்டு Gallop-இல் போய்க்கொண்டிருந்தது. ஜாக்கியைக் கீழே தள்ளிவிடப் போகிறதா ? எனக்கு வேளை வந்து விட்டதா? பயம்? இல்லை சந்தோஷம்? தெரியவில்லை. மூச்சுத் திணறல் மார் வலி? இல்லை. ஆனால் மொத்தத்தில் உள்ளே தாங்க முடியாத பரபரப்பு. சேகர் புறப்பட்டுக் கொண்டிருக்கிறான். TVஇல் ஏதோ தெலுங்குப் படம்.

“சேகர்! ஒருநிமிஷம் தங்கிவிட்டுப் போ. எனக்கு ஏதாவது நேர்ந்துவிட்டால் உன்னை ஆயிரம் கேள்வி கேட்பார்கள்.”

சேகர் புன்னகையில் ஏளனம் சிந்திற்று. ”அப்பா எங்களைச் சொல்கிறார். இப்போது அவர் நடத்துவது சினிமாவா? ட்ராமாவா?” என்கிற மாதிரி.

“சேகர் உள்ளே இரண்டு பக்கம் எழுதி வைத்திருக்கிறேன். எதிரில் உட்கார்ந்தபடி, எனக்கே தெரியணும்.”

ஆனால் சேகர் வாய்விட்டுப் படிக்கவில்லை. தனக்கே படித்துக்கொண்டிருந்தான். அந்த இரண்டு பக்கங்களைப் படிக்க அவனுக்கு ஏறக்குறைய ஒரு மணி நேரம் பிடித்தது. அவன் தலை நிமிர்ந்தபொழுது அவன் முகமும் மாறி இருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/365&oldid=1534641" இலிருந்து மீள்விக்கப்பட்டது