இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பதவியல்]
57
த், ட், ற், இன் என்பன இறந்தகாலத்தை உணர்த்தும் இடைநிலைகளாம்.
உ-ம் பார்த்தான், கொண்டாள், பேசினார், சென்றது. இவற்றுள் பார் முதலிய பகுதிகளுக்கும் ஆன் முதலிய விகுதிகளுக்கும் இடையே த் முதலியவை இடைநிலையாக வந்தமையறிக.
இன் என்பது மேற்காட்டிய உதாரணத்திற்போல இயல்பாக வருவதுடன் சில இடங்களில் முதல் எழுத்துக் கெட்டுப்போய் ன் மாத்திரம் நிற்பதும் சில இடங்களில் இறுதி எழுத்துக் கெட்டுப்போய் இ மாத்திரம் நிற்பதும் உண்டு.
உ- ம். போனான் : இதில் முதல் கெட்டுப்போய் ன் மாத்திரம் நின்றது. சொல்லிய: இதில் இறுதிகெட்டுப்போய் இ மாத்திரம் நின்றது.
ஆநின்று, கின்று, கிறு என்பன நிகழ்காலத்தை உணர்த்தும்.
உ - ம், பேசாநின்றான், உண்கின்றான், படிக்கிறான்.